பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்439

 மீதார் தரச்சென் றகன்வயல்கள் விளைத்துத் தவழ வெதிர்நோக்கி
 ஈதா நந்தி நந்தினியென் றெழுந்த களிப்பி னதிற்றோய்ந்தான்.

(இ - ள்.) பெருநாரைகள், இனிய மேக நீரை உண்கின்ற வானம் பாடிப் பறவைகள், சம்பங்கோழிகள், நீரையும் பாலையும் வெவ்வேறாகப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவைகள், சக்கரவாகப் பறவைகள், சிறகினையுடைய வண்டுக் கூட்டங்கள் தேதா என்று பண்ணிசைத்துப் பாடி ஒன்றோடொன்று போர்செய்து சுற்றித்திரிகின்றதாய பூக்களையுடைய திருத்தணிகை மலையின்மேல் நீர் பெருக்கெடுத்துப்போய் அகன்ற வயல்களில் நெற்களை விளைவித்து மேற்செல்லுதலை நேரே கண்டு, நந்தி நந்தனியென்னும் பெயரையுடைய பொய்கை இதுவாமெனக் கருதி அதனால் தோன்றிய மகிழ்ச்சியால் அதில் மூழ்கினார்.

(வி - ம்.) போதா - பெருநாரை. போதா இப்பொருட்டாதலை "அன்னம் போதா நன்னிறக் கம்புள்" என்னும் அகப்பொருள் விளக்க நூற்பாவான் அறிக. இன் + அம்பு + ஊணிகள் - இனம்பூணிகள் எனப் புணர்ந்தது. இன் - இனிய; அம்பு - நீர்; ஊணிகள் - உண்பவை. இக் காரணத்தால் வானம்பாடிப் பறவைகளை உணர்த்திற்று. வானம்பாடி யென்னும் சிறுபறவை மேகமண்டலம்வரை பறந்து சென்று பாடிக்கொண்டு மேகத்தினின்று கசிந்து சொட்டுகின்ற நீரினை உண்ணுமென்பது, பண்டைக்காலத்துச் சான்றோர் கண்டறிந்த உண்மையாகும். இவ்வுண்மையை,

 1 "தற்பாடிய தளியுணவின்
           புட் டேம்பப் புயல்மாறி
           வான்பொய்ப்பினும் தான்பொய்யா"

என்றும்,

 2 "துளிநசை வேட்கையான் மிசைபாடும்புள்"

என்றும்,

 3 "வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியை
           நோக்கிப் பாடுமாறுபோல"

என்றும்,

 4 "நீரிடும்பை புள்ளினுள் ஓங்க லறியும்"

என்றும் கூறுதலின் அறியப்பெறும். அதனால் "இனம்பூணிகள்" என்றார். புனல்பால் பிரிக்கும்புள் - அன்னப்பறவை. நேமி - சக்கரவாளப் பறவைகள். இவை காதலிற் சிறந்தன; பெடையும் சேவலும் இணை பிரியாது வாழுமென்ப. தேதா : இசையொலிக் குறிப்பு. எறிந்து - அடித்து; மோதிக்கொண்டு. பிறங்கல் - மலை. மீதுஆர்தர என்னும் வினையால் வினைக்கு முதன்மையாகிய நீர் அவாய் நிலையால் வருவித்துரைக்கப்பட்டது. நந்தி நந்தினி யென்பது, ஆங்குள்ள தடாகத்தின் பெயராகும். இத்தடாகம் இப்பெயராதலை கடலகடும், இனைய அகழ்ந்து புகுநீத்தம் இரைக்கும் நந்தி நந்தினியும் (திருநகர : 133) என இந்நூலகத்து முற்கூறப்பட்டமையானும் அறியப்பெறும். தோய்ந்தான் - மூழ்கினான்; குளித்தான்.

(93)

 1.  பட்டினப்பாலை : 3 - 6. 
 2.  கலித்தொகை : 46. 
 3.  சீவகசிந் : 2897. நச், உரை. 
 4.  நான்மணிக்கடிகை : 96.