பக்கம் எண் :

440தணிகைப் புராணம்

 திரையும் புனறோய்ந் தெழுந்தாங்குச் செய்யுங் கடன்க ணிரப்பியபின்
 கரையி னிவர்ந்தா னவ்வேலைக் கதித்த வழியின் கீழ்பாங்கர்
 வரையென் றயிர்க்கு மாடநிரை வயங்கி வெளியி னிடைதூர்த்த
 விரைசென் றெதிரும் வீராட்ட காச நகரங் கண்ணுற்றான்.

(இ - ள்.) மடங்குகின்ற நீரில் மூழ்கி மேலெழுந்து வந்து அவ்விடத்தே செய்கின்ற கடமைகள் யாவற்றையும் முடித்துக்கொண்ட பின், கரைமீது ஏறிநின்றார். அதுகாலை நீண்ட வழியின் கிழக்குப் பக்கத்தில் மலையென்று ஐயங்கொள்ளுமாறு மாட வரிசைகள் விளங்கி மேல் வெளியிடத்தை அடைத்துள்ள பலவகை மணங்களும் எதிர் நோக்கி வருவதாய வீராட்டகாச மென்னும் நகரைக் கண்டனர்.

(வி - ம்.) திரைதல் - மடங்குதல். மடங்கி மடங்கிச் செல்லுதலால் அலைக்குத் திரை யென்னும் பெயர் வந்தது. செய்யுங்கடன்கள். நீராடியபின் செய்யத்தக்கவை; தோய்த்துலர்ந்த ஆடை உடுத்தல்; கடவுளை வழிபடல் முதலியன. இவர்ந்தான் - ஏறினான். கதித்தவழி - நீண்டவழி; நேரானபாதை. வரை - மலை. அயிர்க்கும் - ஐயங்கொளச் செய்கின்ற. இடை தூர்த்த - இடைவெளியில்லாமல் அடைத்துள்ள. விரை - மணம்; தொழிற்பெயர். வீராட்டகாசம் - சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பிரணவப் பொருளை உபதேசித்த திருத்தணிகை நகரிலுளதாகிய இடம். அதனால் திருத்தணிகைக்கு வீராட்டகாசம் என்னும் பெயருண்டு.

(94)

வேறு

 கோடுகொண்டு லாவுறுங் குலாவுமாறு கான்மரீஇ
 ஆடுநீடு சிறைபடு மணங்குவேங்கை மாறுகொண்
 டோடும்வார்ந்த பட்டநெற்றி யுற்றுநிற்கு மின்னவாம்
 தோடுகொண்ட விருதிறத்த தும்பிச்சூழ லெங்குமே.

(இ - ள்.) இரண்டு கொம்புகளுடன் செல்லும் (மரக்கிளைகளில் வாழும்); மாறிமாறி நடக்கின்ற கால்களைக்கொண்டு உலாவாநிற்கும் (ஆறுகால்கள் கொண்டு பறந்து திரியும்); அசைந்து செல்லும் (ஆடி நிற்கும்); நீண்ட சங்கிலிகளால் கட்டப் பெற்றிருக்கும் (நீண்ட சிறகுகளுடையவாயிருக்கும்); வருத்துகின்ற புலியுடன் பகைகொண்டு ஓடும் (அழகிய வேங்கைப் பூவைக்கண்டு மாறுபாடுற்று ஓடாநிற்கும்); நீண்ட முகபடாத்தை நெற்றிக்கண் கொண்டிருக்கும் (நீண்ட தடாகத்தின் மேலிடத்தில் சார்ந்திருக்கும்); ஆகலான் இனமாகக்கூடிய இருவேறு வகைப்பட்ட யானைக்கூட்டம் (வண்டுக் கூட்டம்); எல்லா இடங்களிலும் இத்தன்மையுடையனவாக இருக்கும்.

(வி - ம்.) கோடு - யானைத்தந்தம்; மரக்கொம்பு. மாறுகால், ஆறுகால் எனப் பிரிக்க. ஆடும் - அசையும்; ஆடிநிற்கும். சிறைபடும் - சங்கிலிகளால் கட்டப்பெற்றிருக்கும்; சிறகுகள் உடையவாயிருக்கும், வேங்கை மாறுகொண்டோடும் - புலியுடன் பகைகொண்டு ஓடும்;