பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்441

'வேங்கைப் பூவைப் பார்த்து மாறுபட்டுச் செல்லும். பட்டம் நெற்றி உற்று இருக்கும் - முகப்பட்டத்தை நெற்றிக்கண் கட்டப்பெற்று விளங்கும்; தடாகத்தின் மேலிடத்தைப் பொருந்தி நிற்கும். இருதிறத்த தும்பி - இரண்டு வெவ்வேறான தும்பிகள். தும்பியென்பது யானைக்கும், வண்டுக்கும் பெயராதலால், சிலேடையணி நயந்தோன்ற "தும்பிச் சூழல் எங்குமே" என்றார். இது செம்மொழிச் சிலேடையாக அமைந்திருத்தலை அறிக.

(95)

 நித்திலங்கொ ழித்தலு நிரந்துவண்ட லாடலும்
 ஒத்துநீர்ப டிதலு மொண்மலர ணிதலும்
 தொத்தலர்ந்த பைம்பொதும்பர் சூழ்தலும்பொ ருந்திய
 பைத்தெழுந்த விருதிறத்த பண்ணையீட்ட மெங்குமே.

வயல்கள் :

(இ - ள்.) முத்துக்களை ஓரங்களில் ஒதுக்குதலும், பரந்து வண்டல் மண்ணாக ஆக்குதலும். ஒன்றுபட்டு நீர் ஓரிடத்தே தங்குதலும், ஒளி பொருந்திய மலர்களை மேலிடத்துக் கொண்டிருத்தலும், பூங்கொத்துக்கள் மலர்ந்த பசிய சோலைகளைச் சூழ்ந்து கிடத்தலும் ஆகிய பொருந்திய பசிய பயிர்கள் வளருகின்ற மிக்க மேன்மையான வயல் தொகுதிகள் யாண்டும் பரந்துள்ளன.

மகளிர் கூட்டம் :

முத்துக்களைச் சிறு சுளகுகளால் கொழித்தலும், பரவிச் சிற்றி லிழைத்துச் சிறுசோறாக்கி விளையாடுதலும், ஒன்றுகூடி நீரிற் குளித்து விளையாடலும், சிறந்த மலர்களைப் பறித்துத் தலையிற் சூடிக் கொள்ளுதலும், பூங்கொத்துக்கள் மலர்ந்துள்ள பசிய சோலைக்கண் சுற்றி இன்ப நுகர்தலும் ஆகிய பொருத்தமுள்ள இளம்பருவ வளர்ச்சியுள்ள சிறந்த இயற்கை வாய்ந்த மகளிர் கூட்டம் எவ்விடங்களினும்
உள்ளன.

(வி - ம்.) நித்திலம் கொழித்தல் முதலிய வினைகள் வயல்கட்கும், இளமகளிர்க்கும் ஒத்துள்ள தன்மையினால் செம்மொழிச் சிலேடையணி நயந்தோன்ற, "இருதிறத்த பண்ணையீட்டம் எங்குமே" என்றார். இரு திறத்த - இரண்டு வகையான என்றும். சிறந்த என்றும் இருபொருள் நயம் கொள்க. பண்ணை - வயல்; மகளிர்கூட்டம்.

(96)

 வயங்குசித்தி ரத்தன மாதர்தங்கு ழாத்தன
 தயங்கிவிண்ணி னோங்குவ தண்ணென்பாட லீண்டுவ
 முயங்குகண்கள் வாங்குவ முதிர்ந்தவின்ப மாக்குவ
 இயங்குகின்ற விருதிறத்த வம்மனைக ளெங்குமே.

(இ - ள்.) விளங்குகின்ற சித்திரங்களையுடையனவும் இளமகளிர் கூட்டங்களை யுடையனவும் ஒளியெறிந்து வானந்தொட வுயர்ந்தனவும் இன்பந்தரும் பாடல்கள் மிக்கனவும், முயங்குகின்ற கண்களைத் தம்பால் இழுப்பனவும் மிக்க இன்பத்தை உண்டாக்குவனவும் ஆகிய நடக்கின்ற தெருக்களின் இருபக்கங்களினும் உள்ளனவாகிய அழகிய மாடங்களே எல்லாவிடத்தும் உள்ளன.