| (வி - ம்.) சித்திரம் இழைத்தனவும் மகளிர்கூட்ட மிக்கனவும் முதலிய தன்மைகளன்றி வறுமனை யெங்குமே இல்லையென்றபடி. இயங்குகின்ற - நடப்பதான. இருதிறம் - இருபகுதி. அஃதாவது தெருக்களின் இருபக்கங்களினும். அம்மனை - அழகிய மனை. (97) | | மண்சுருங்க வார்ந்தன வளாயமாம திற்குலம் | | | விண்சுருங்க வோங்கின விளங்குகோபு ரத்தொகை | | | எண்சுருங்க வன்னவற் றெழுந்தவார்கொ டித்திரள் | | | கண்சுருங்க மல்கின கதித்தபல்வ ளங்களே. |
(இ - ள்.) சுற்றுமுள்ள பெரிய மதிற்கூட்டங்கள் மண்ணிடம் சிறிதென்னும்படி நிறைந்துள்ளன; விளங்குகின்ற கோவிற் கோபுரங்கள் விண்ணிடம் சிறிதென்னுமாறு வளர்ந்துள்ளன; அம்மதில்மீதும் கோபுரத்தின்மீதும் கட்டப்பட்ட நீண்ட கொடிக்கூட்டங்கள் எண்ணிக்கைக்கு அடங்காவாய்க் காண்பவர் கண்கள் கூசும்படி மிக்க பலவகைப்பட்ட வளப்பங்கள் நிறைந்துள்ளனவாகும். (வி - ம்.) சுருங்க என்பது, அவ்விடங்கள் சிறிதென்னும்படி, அதிலுள்ள பொருள்களின் மிகுதித்தன்மையைக் குறித்துநின்றது. வளாவுதல்- சுற்றுதல்; வளாய - சுற்றிய; இறந்தகாலப் பெயரெச்சம். எண்சுருங்க - எண்ண இயலாத; இத்துணை அளவெனக் கணக்கிட இயலாத என்னும் பொருட்டு. கண்சுருங்க - கண்ணாற் பார்க்குமளவின்றி விரிந்துகிடத்தலால் கண்ணொளி கதுவாது தம் ஒளி மழுங்குவதாயிற்று. கதித்த - மிகுதியான. பல்வளங்கள் - பலவகைப்பட்ட வளப்பங்கள். (98) | | சுரும்புமூசு தேந்தொடை சுடர்ந்தபன்ம ணிவடம் | | | விரும்பநாற்றி யெங்கணும் விசித்ததோர ணங்களும் | | | கரும்பரம்பை பூகதங் கலந்துபொன்ன ணிந்தெழில் | | | அரும்புபந்த ரீட்டமு மழற்றுவேனின் மாற்றுமே. |
(இ - ள்.) வண்டுகள் மொய்க்கின்ற தேன்பொருந்திய மாலையும், ஒளிவிட்டெறிக்கின்ற ஒன்பதுவகை மணிகளழுத்திய ஆரங்களும், யாவரும் விரும்பும்படி தொங்கவிட்டு எங்கும் கட்டப்பட்டுள்ள தோரணங்களும், கரும்பும் வாழையும் கமுகும் கலந்து பொற்றகடுகளால் வேய்ந்து அழகு தோன்றுகின்ற பந்தல்களின் கூட்டங்களும் வருத்துகின்ற வேனிலின் வெப்பத்தை மாற்றுவதாகும். (வி - ம்.) தேம் - தேன். பல்மணி - ஒன்பதுவகை மணிக்கற்கள். வடம் - ஆரம்; இரத்தினமாலை. நாற்றி - தொங்கவிட்டு. விசித்த - கட்டிய. அரம்பை - வாழை. பூகதம் - கமுகு, பூகமென்பது, காதமென்பது காவதமென வந்தாற்போல பூகதமென வந்தது. பொன்னணிந்து என்பதற்குப் பொற்றகடுகள் வேய்ந்து எனப் பொருள் கொள்ளலன்றி அழகுறப் புனைந்து என்று கூறலுமாம். அரும்பு - தோற்ற மளிக்கின்ற. பந்தர் - பந்தல் : இறுதிப்போலி. ஈட்டம் - கூட்டம். தோரணங்களும், பந்தல்களும் வேனிலால் வருத்துகின்ற வெப்பத்தை மாற்றுதலால், அங்கு எக்காலத்தும் வெப்பமின்மையைக் குறித்துரைத்தார் எனக் கொள்க. (99) |