| | உடுநிரந்த மண்டிலம் வேறுண்டாய தோவென | | | விடுசுடர்வி ளக்கமு மெழிலிவானம் வேறெனப் | | | படும்விரைப்பு கைகளும் பனியினோடு கூதிரை | | | முடுகிவாய்ம டுத்துணு மொய்ம்பினான்ற மாடமே. |
(இ - ள்.) வலிமைபெற அமைந்த மாளிகைகள், வான்மீன் கூட்டங்கள் வரிசையாகப் பரந்துள்ள வானமண்டிலம் மற்றொன்றுமுளதோ வென்னும்படி ஒளிவிட்டெறிக்கின்ற விளக்குகளும், மேகங்கள் படர்ந்த வானம் மற்றொன்றுமுண்டோ வென்னும்படி மணம்பொருந்திய புகைகளும் பனியோடு கூடுதலையும் நெருங்கி அவைகளைப் போக்குந் தன்மையனவாய் அமைந்துள்ளன. (வி - ம்.) உடு - வான்மீன் ; நட்சத்திரம். எழிலி - மேகம். விரைப்புகை - மணப்புகை. அங்குள்ள மாளிகைகள் விளக்குகளில் வரிசைபடப் பரந்திருத்தலால் நட்சத்திரக் கூட்டங்கள் மின்விட்டு ஒளிவீசுகின்ற வானகம் ஒன்றுண்டோ அஃதன்றி மற்றொன்று முண்டோ வெனவும், இல்லங்கள்தோறும் மைந்தரும் மகளிரும் மாடத்தின்கண் எடுத்த அந்தீம்புகை எங்கும் பரந்து திசைக்களிற்றின் மூக்குப்புழைகள் தோய மிகுதியாக மேகப்படலம்போல் பரந்து நிரந்து போர்த்திருத்தலால் மேகந் தோய்ந்த வான்மண்டிலமன்றி வேறு மண்டிலமும் உண்டோவெனவும் கண்டோர் மருண்டு ஐயுறவு கொள்ள இருந்தனவென, மாலைப்பொழுதில் முல்லையும் நெல்லும் கலந்து முற்றங்களில் தூவி விளக்கேற்றி மணப்புகை யெடுக்கும் மங்கலமகளிர்தம் சிறப்பை மாடத்தின்மேல் ஏற்றிக் கூறியவாறாம். இதனால் முற்பாட்டில் வேனில் வெப்பத்தைத் துரத்தியமைக்கேற்ப, பனியையும் அதனால் உண்டாம் கூதலையும் துரத்தும் தன்மையை "முடுகுவாய் மடுத்துணும்" என நயம் பெறப் பொருள் முரண் அழகு தோன்றக் கூறினார். மொய்ம்பு - வலிமை. நிலநடுக்கத்தானும் அசையாது வலிமைகொள்ள மாடம் எழுப்பிய தொழிலாளர்தம் கைவினைத்திறத்தைக் காட்டியவாறு. (100) | | இவறிமாதர் குங்கும மீர்ம்பனிப்பு னல்விராய்ச் | | | சிவிறியின்மு றுக்குபு சிந்துகின்ற சேதகம் | | | தவறிலந்த லார்கள்வீசு தமனியப்பொ டிகலாய்ச் | | | சுவறநின்று பூமியின் றொன்னிறமி தென்னுமே. |
(இ - ள்.) இளமகளிர் மேன்மாடத்தின்மீதேறிக் குங்குமத்தைக் குளிர்ச்சி பொருந்திய நீரில் கலந்து கலக்கி, நீர்த்துருத்தியின் உள்ளடைத்துச் சிதறுகின்ற அச்சேறானது குற்றமற்ற அந்நங்கையர்கள் தூவுகின்ற பொன்பொடி கலந்து வற்றிப் பூமியினது பழையநிறம் இதுவென்பதுபோல் காட்டாநிற்கும். (வி - ம்.) மாதர் இவறி எனமாறுக. இவறி மேன்மாடத்தின் மேலேறி. ஈர்ம்பனி - மிக்க குளிர்ச்சி : ஒருபொருட் பன்மொழி. சிவிறி - நீர்த்துருத்தி, நீரை அடைத்துவைத்துப் பீச்சுகின்ற குழல். சேதகம் - குங்குமக்குழம்பு. தமனியப்பொடி - பொன்பொடி. கலாய் - கலந்து. சுவறநின்று - சுவறிஎன ஒருசொன்னீர்மைப்பட்டு நின்றது; நீர்வற்றி என்னும் பொருளது. குங்குமச் சேறும் பொன்பொடியும் |