பக்கம் எண் :

44தணிகைப் புராணம்

பிற் றங்கியிருத்தலால் மணியோசையுடன் மேய்வது அவர்கட்கு மணியடித்து உணவூட்டலை யொக்குமென்க; ஆங்கணென்பது நல்லாவென்பதனோடும், சாலவென்பது ஆய்ந்தவென்பதனோடும் இயையும்; பசுவினுறுப்பிற்றேவர்கள் தங்கியிருத்தலை சிவதருமோத்தரம் - கோபுரவியலிலும், இந்நூல் அகத்திய னருள்பெறு படலத்தும் காண்க.

(66)

 உழலைத் தொழுவா னிரைசாலவு வக்கும் வண்ணங்
 குழலத் தெழுமின் னிசையெவ்வுயி ருங்கு ளிர்ப்ப
 எழலுற் றதுநல் லவரின்புறத் தக்க தியார்க்கும்
 கழலற் றவின்பப் பயனாய்க்களிப் பிப்ப தன்றே.

(இ - ள்.) நல்லோர்கள் இன்புறத் தகுந்த செயல் யாதாயினும் யாவர்க்கும் நீங்குதலற்ற இன்பமாகிய பயனாகி நின்று களிப்படையச் செய்வதொன்றன்றோ, ஆதலால் உழலைமரத்தாற் றடைசெய்யப்பட்ட வாயிலோடு கூடிய தொழுவின்கணுள்ள பசுவினங்கள் மிக மகிழும் வண்ணம் புல்லாங்குழலினின்று மெழுகின்ற இனிய விசையானது (ஓரறிவுடைய புன்மர முதலிய) எவ்வகை யுயிர்களும் (இன்பமாகிய கடலில் மூழ்கிக்) குளிர்ச்சியடையும் வண்ண மெழலுற்றது.

(வி - ம்.) உழலை - பசுக்கள் வெளியே செல்லாது வாயி லிருபக் கத்து நாட்டிய கம்பங்களிலுள்ள துவாரங்களில் கோத்திருக்குங் கழிகள். அத்து : சாரியை; கழலற்ற - நீங்குதலற்ற; கழல் : முதனிலைத் தொழிற்பெயர்; குழலகத்து : விகாரம். இது வேற்றுப்பொருள் வைப்பணி.

(67)

 அல்லும் பகலுங் கருதன்பர ளித்த வேற்று
 வெல்லும் பரபோ கம்விளைத்தருள் வேந்து நேரப்
 புல்லும் புனலுந் தமையூட்டுநர் பொற்ப விண்ணோர்க்
 கொல்லும் பயமா தியுணப்பய னுய்க்குங் கற்றா.

(இ - ள்.) தம்மை யற்பமாகிய புல்லினையும் எளிதிற்கிடைக்கு நீரினையுங் கொண்டுண்பிப்பவர் அழகினையுடைய தேவர்களுக்கு அவியாகப் பொருந்தும் பால் முதலிய உணவினைத் தமக்குச் செய்த உதவிக்குப் பயனாக இடையருக்குக் கொடுக்குங் கன்றையுடைய பசுக்கள் இரவும் பகலுந் தம்மை மனமொழி மெய்களான் வழிபடுமன்பர் தமக்கிடும் பத்திர புட்ப முதலியவற்றை யேற்று அப்பூசனையின் பயனாக வவர்க்கு மேம்பட்ட சிவலோகத்தினை விளைவித்து அருள்செய்கின்ற அகிலலோக வரசனாகிய சிவபெருமானை
யொப்பன.

(வி - ம்.) ஊட்டுநர் பொற்ப உய்க்கும் என இயையும், வேந்து ஈண்டு சிவபெருமான்; அளித்த உருபு மும்மையும் விகாரத்தாற் றொக்கன. பயம் - பால்; ஆதி யென்றதனால் கோசல கோமயம் ததி முதலிய வற்றையுங் கொள்க. தமக்கு : விகாரம்.

(68)

 தாற்றுக் கதிர்கால் வரகம்பயிர் சாமை சொன்ன
 லாற்றக் கிளருந் துவரைப்பயி ராதி முற்றுந்