பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்445

 1 "நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
           கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
           பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
           முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் "

என்பதும்,

 2 "கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
           சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
           மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்
           ஞானக் கலைவாழ் நகர்"

என்பதும் நினைவுகூர்ந்து மகிழற் பாலனவாம்.

(102)

 வயலின்மள்ள ரார்ப்பொலி வரையின்மாமு ழக்கொலி
 புயறவழ்ந்து லம்பொலி போகுநந்தி நந்தினி
 பயிலுகின்ற பேரொலி பலவுமுள்ள டங்குற
 இயமியம்பு பேரொலி யெழுந்துமிக்கொ லிக்குமே.

(இ - ள்.) வயலின்கண் மள்ளர்கள் ஆரவாரிக்கின்ற ஒலியும், மலைக்கண் வாழும் விலங்குகளின் முழக்கத்தின் ஒலியும், மேகங்கள் தவழ்ந்துசென்று முழங்குகின்ற ஒலியும், பலவிடங்கட்கும் செல்லுகின்ற நந்தி நந்தினித் தடாகத்தின் அலைகள் மேல்மேல் நெருங்குதலால் உண்டாம் மிக்க ஒலியும் ஆகிய பல்வகை ஒலிகளும் தமக்குள் அடங்கும் படி பல்வகை வாத்தியங்கள் மேலோங்கி மிகுதியாக ஒலியா நிற்கும்.

(வி - ம்.) மள்ளர், இவர் இக்காலத்துப் பள்ளரென வழங்கப்படுவர். அவர்களால் வயல்களில் உழுதல், பிரம்படித்தல், விதைத்தல் முதலிய வேளாண்மைத் தொழில் செய்தற்கு உண்டாக்கும் பேரொலி. வரையின்மா, மலையில் வாழ்கின்ற சிங்கம் புலி கரடி யானை முதலிய விலங்குகள் முழக்கஞ்செய்யும் பேரொலி; இவ்வெல்லா வகை ஒலிகளும் அத் திருத்தணிகைக்கண், பல இல்லங்களினும் முழங்குகின்ற மங்கலவாத்திய ஒலியானும், தணிகைப் பெருமான், திருக்கோயிலின்கண் இடையறாது முழங்குகின்ற வாத்தியங்களின் பெருமுழக்கத்தானும், விழவுகாணும் பல்வகை ஒலிமிக்க வாத்திய முழக்கங்களானும் உள்ளடங்கி ஒன்று கலந்து மிக்கொலிக்கும் எனக் கொள்க.

(103)

 பிறக்கமல்கு தேவர்கள் பெட்டிறைஞ்ச வுற்றவர்
 இறக்கநெஞ்செ ழாமையா லிருப்பநோக்கி யன்னவர்
 துறக்கமுற்று மவ்வயிற் றொடர்ந்திறுத்து வாழ்ந்தெனச்
 சிறக்குமந்த நகரினைத் திசைவணங்கி யண்மினான்.

(இ - ள்.) ஒளிமிக்க தேவர்கள் விரும்பி முருகப்பெருமானை வணங்குதற்குப் போந்தவர் அதைவிட்டுச் செல்லற்கு நெஞ்செழாமல் இருத்தலினால்; அதைக் கண்டு அவர்களின் வானுலகம் முழுதும்

 1.  பட்டினப்பாலை : 22 - 5. 
 2.  நளவெண்பா, சுயம்வர : 13.