| அவ்விடத்துத் தொடர்ந்து தங்கியிருந்த தென்னும்படி சிறந்திருக்கின்ற அந்தத் திருத்தணி நகரத்தைத் திசைநோக்கிப் பணிந்து அதைச் சேர்ந்தார், அகத்திய முனிவர். (வி - ம்.) பிறக்கம் மல்கு - ஒலிமிக்க ; தேவர்கள், ஒளிவடிவின ராதலால் பிறக்கமல்கு என்னும் அடை கொடுத்தனர். பெட்டு - விரும்பி. இறைஞ்ச என்னும் வினையால் வினைக்கு முதலாகிய முருகப்பெருமான் என்பது அவாய்நிலையால் வந்தது. இறக்க - கடக்க; அதை விட்டு நீங்க என்னும் பொருளது. இறத்தல் இப்பொருட்டாதல் "இறந்தார் இறந்தா ரனையர்" என்புழிக் காண்க. இருப்ப : செயவெனெச்சம். காரணப் பொருட்டாக நிகழ்காலம் காட்டிற்று. துறக்க முற்றும் - வானுலகம் முழுதும். இறுத்து - தங்கி. முனிவராகிய அகத்தியர் அந்நகர்ச் சிறப்பைக் கண்டு திக்குநோக்கி வணக்கஞ் செலுத்தின ரெனக் கொள்க. (104) | | பூமிநாத மாதியீ றாயவெப்பு ணர்ப்பும்வீழ் | | | சாமிநாதன் வைகிய தென்கரைத்தண் கோயிலும் | | | நேமிநாத னாதன்வாழ் வடகரைக்க ணிலயமும் | | | தோமினாத லில்லவன் கண்டெழுந்து துள்ளினான். |
(இ - ள்.) மண்முதல் நாதம் ஈறாகவுள்ள எவ்வகைப்பட்ட புணர்ப்புக்களையும் கெடுத்தருளுகின்ற சாமிநாதனாகிய முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற தென்பக்கக் கரையிடத்துள்ள திருக்கோயிலும் உருளைப்படையைக் கொண்ட திருமாலுக்கும் தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற வடக்குக் கரையிடத்துள்ள திருக்கோயிலும் மின்னல் தோற்றத்தினளவு கூடக் குற்றமற்றவராகிய அகத்திய முனிவர்கண்டு மேலெழுந்து மகிழ்ச்சியாற் குதிக்கலாயினார். (வி - ம்.) பூமி - நிலம், இதனை வடமொழியில் பிருதிவி என்பர். தன்மாத்திரைக ளெனப்படும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றங்களிலிருந்து தோன்றியன. நிலம் தீ நீர் கால் வான் எனப்பட்ட ஐம்பூதங்களாகும். நாததத்துவம் எனப்படுவது பிரணவவொலி ; அவ்வொலியே சுத்த வித்தியாதத்துவம் எனப் பெறுவது. இவற்றை விரித்துக் கூறுங்கால் பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அறிகருவி ஐந்து, தொழிற்கருவி ஐந்து, மனம் புத்தி அகங்காரம் குணம் மாயை (பிரகிருதி) இவை ஐந்து ஆகத் தத்துவங்கள் இருபத்தைந்தும் தூலாவழி (அசுத்தாத்துவா) இருபத்தாறாந் தத்துவம் அராக முதல் காலதத்துவம் ஈறாக ஐந்தும் மிச்சிராத்துவா. ஆக முப்பதும் ஆன்மாக்களுக்குத் தனித்தனியே நுண்ணிய நாடுகளாம். அதற்குமேல் மாயா தத்துவம், அதற்குமேல் சுத்தவித்தியா தத்துவம், அதற்குமேல் ஈசுர தத்துவம், அதற்குமேல் சதாசிவ தத்துவம், அதற்கு மேல் சத்தி தத்துவம், அதற்கு மேல் சிவதத்துவம், இவைகளே முப்பத்தாறு தத்துவங்கள் எனப்பெறும். இவற்றுள் சிவதத்துவம் நாதம் எனவும் சத்திதத்துவம் விந்து எனவும் கூறப்படும். இவைகளையெல்லாம் கடந்து நிற்போன் முழுமுதல் இறைவனாகலின், "பூமி நாதம் ஆதி . . . . . . சாமிநாதன்" என்றனர். |