| (இ - ள்.) மலையைப் பிளந்துகொண்டு யாவரும் கொள்ளப்படுகின்ற ஆற்று நீரானது உட்சென்று ஒதுக்கப்படுகின்ற வைரமணிகளும் முன் நுனிப்பாகம் சுருங்கியுள்ள சங்குகள் கருவில் வருந்தி ஈன்ற முத்துக்களும் நிறைந்திருத்தல், தன் சிறப்பைக் கெடுக்கின்ற களங்கமாகிய மறுவை அடியோடு பேர்த்தெறிந்துவிட்டு அழகு நிறையும்படி பெருமை மிக்க நிலாவானது வட்டவடிவம் பெற வளர்ந்து அவ்விடத்தே பெருந்தவஞ் செய்தலைப் போன்று சிவகங்கையானது காட்சியளிக்கும். (வி - ம்.) வைரமணியானது கல்முற்றி அதன் முதிர்வால் முதிராத கல்லைப் பிளந்துகொண்டு உண்டாவதாகலான் "சென்றொதுக்கும் வச்சிரம்" என்றார். வச்சிரம் - வைரம். "கல்லிற் பிறக்கும் கதிர்மணி" என்னும் ஆன்றோர் உரையும் ஓர்க. அன்றி அருவிநீர் கல்லைப் பிளந்து கொண்டு அதன்கண் விளைந்துள்ள வைரமணிகளை அரித்துக்கொண்டு வந்து ஒதுக்கு மென்றலுமாம். சங்குகள் சுரிந்த மூக்குடையதாகலின் "தலைசுருங்கு சங்கு" என்றார். உளைந்து - வருந்தி என்னும் பொருட்டு, ஈண்டுக் கருவுயிர்த்தலுக்காக வருந்தி என்னும் பொருள்தந்து நின்றது. இக்கருத்தை "குடவ ளைக்குலம் வயிறுளைந் தினமணி கொழிக்கும்" என்றார் பிறரும். மேற்கூறிய சிவகங்கைக்குள் வைர மணிகளும் முத்துக்களும் ஆற்றுநீரால் கொணர்ந்து ஒதுக்கப்பட்டு வட்டவடிவாகக் கிடத்தல், நிலாவானது தன் களங்கத்தை நீக்குதற் பொருட்டு முருகப் பெருமானை நோக்கித் தவங்கிடத்தல்போல் காட்சியளித்த தெனத் தற்குறிப்பேற்ற உவமையணி தோன்றக் கூறினார். (107) | | அன்னகோட்ட கம்பிரான லங்கல்வேணி மீதுடன் | | | மன்னுகங்கை தன்னின்மல்லல் வௌவவுன்னி யாடுவான் | | | முன்னுதான வர்த்துரப்ப மொய்யொளிக் கலைக்கொழுந் | | | துன்னியங்கண் வட்டமாய்வ ளைந்துகொண்ட தொக்குமே. |
(இ - ள்.) சிவபெருமானது கொன்றை மலர்மாலை யணிந்த திருச்சடையின்மேல் தன்னுடன் சார்ந்திருக்கின்ற கங்கையின் வளப்பத்தைக் கொள்ள எண்ணியும், பகைவராகக் கருதத்தக்க அசுரர்களை வெருட்டக் கருதியும் நிறைந்த ஒளியையுடைய கலைநிரம்பிய நிலவானது அந்தப் பொய்கையில் மூழ்கி, அவ்விடத்தே வட்டமாக வளைந்திருப்பதைப் போன்று சிவகங்கையானது காட்சியளிப்பதாகும். (வி - ம்.) அலங்கல் - மாலை; ஈண்டுக் கொன்றைமாலை; அப்பொய்கையிடத்து அருவிகளால் கொணர்ந்து ஒதுக்கி வட்டவடிவமாகக் கிடக்கின்ற வைரமணி, முத்துக்களின் குவைகள், மேற்கூறியவாறு நிலவானது தவஞ்செய்வதை ஒப்பதாக இருந்ததெனக் கூறியவர்; அந்நிலவையே கொண்டு அப்பொய்கைக்கு மற்றொரு புனைவு கூறுகின்றார். வளைந்துகிடக்கின்ற அத்தடாகக் காட்சி, நிலவானது கங்கையின் புனிதத்தை முழுதும் பெறநினைந்தும், தன் பகைவராகிய அசுரரை வெருட்டுதற்கு உன்னியும் மூழ்கி வட்டவடிவாகச் சூழ்ந்துகொண்டு கிடப்பதாகத் தற்குறிப்பு ஏற்றமாக்கிக் கூறினார். பொய்கையுள் முத்தும் வைரமும் சேர்ந்து வட்டமாகக் கிடப்பது நிலவுக் காட்சிபோல் தோன்றியது என்க. (108) |