பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்449

 பளிங்கரிந்து சுற்றெலாம் பதித்துமுற்று வித்தவவ்
 வொளிர்ந்தகற்ற லத்தின்மொட்டு டைந்தபங்க யங்களும்
 மிளிர்ந்தவோதி மங்களு மிடைந்தநீர்நி ழற்றலின்
 குளிர்ந்தநீரு நீருறாத கோடுநாடொ ணாததே.

(இ - ள்.) பளிங்குக் கற்களை அறுத்து சுற்றுப்புறக் கரையெங்கும் பதித்து முடித்த அந்த ஒளி யெறிக்கின்ற கல் தலத்தினிடத்தே அரும்புகள் வாய்விண்ட தாமரை மலர்களும், அதன்கண் இருந்து தோற்றமளிக்கின்ற அன்னப்பறவைகளும் நிறைந்த நீருடன் அவ்வுருவ நிழலைக் காட்டுதலினால் குளிர்ச்சியுள்ள நீரும், நீரில்லாத கரையிடமும் இன்னதென அறிய இயலாத தன்மையுடையதாகும்.

(வி - ம்.) அரிதல் - அறுத்து ஒழுங்குபடுத்தல். முற்றுவித்தல் - முடியச் செய்தல். கல்தலம் - பளிங்கரிந் தியற்றிய இடம். மொட்டு - அரும்பு. உடைந்த - விரிந்த, மலர்ந்த, விண்ட. பங்கயம் - தாமரை. பங்கம் + அயம் - சேற்றின்கண் உண்டாவது என்பது பொருள். பங்கம் - சேறு. அயம் - நீருக்குஆய் அதனால் உண்டாம் தாமரையைக் குறித்தது; அரும்பு, ஆகுபெயர். நிழற்றல் - நிழல் செய்தல்; அந்நிழலின் தோற்றம் பளிங்குத் தலத்தின்மீது பாய்ந்து காட்சியளித்தலினாலே, இதுதான் பொய்கை, இதுதான் கரையென வேற்றுமை அறிதற்கியலாததாக அமைந்துள்ளது. இது பொய்கைக்கும் கரைக்கும் வேற்றுமை தோன்றாதிருக்கும் மயக்கத்தைக் கற்பித்துக் கூறுதலால் மயக்கவணி.

(109)

 வாளையொன்றெ ழுந்துவீழ வாளைநோக்கி னாரெலாம்
 வாளையொன்றெ ழுந்ததென்று வாய்மைசொல்ல வவ்வயின்
 வாளைநீழ னோக்கினார் மதத்தரின்ம றுத்துநீள்
 வாளைபல்ல வென்னவின் மணிக்குலங்க ளெங்குமே.

(இ - ள்.) அப் பொய்கையில் ஒருவாளைமீனானது மேலே துள்ளியெழுந்து வீழ அதைப் பார்த்தவர் யாவரும் ஒரு வாளைமீனானது மேலே வீழ்ந்ததென்று உண்மையையே கூறாநிற்ப, அவ்விடத்து வாளை மீனின் நிழலைப் பார்த்தோர் பித்துப் பிடித்தவர்போல, அவ்வுண்மையை மறுத்துரைத்து நீண்ட வாளைமீன்கள் (பல மேலெழுந்து துள்ளின) என்று கூறும் வண்ணம் ஒளிவிடும் மணிக்கூட்டங்கள் அப்பொய்கைக் கரைக்கண் எவ்விடத்தும் மிக்குள்ளனவாம்.

(வி - ம்.) வாளைமீன் ஒன்று துள்ளி வீழினும் கண்டோர் பலவெனக் கூறுமாறு மணிகள் பரவி மிகுதியாக எங்கும் கிடந்தன.

(110)

 திங்கள்வெண்ணி லாவெனச் செறிந்தநித்தி லக்கதிர்
 ங்கலோடு வெய்யவன் றழற்பிழம்பு துன்னலால்
 பங்கயங்கு விப்பறாத லர்ந்தகூடு பாணிதேர்ந்
 தங்கணன்பர் செவ்விநாடு மந்நலார்கள் காதலின்.

(இ - ள்.) தம்மிடத்து அன்புபூண்ட காதலர்களின் கூடுகின்ற காலத்தையறிந்து அதற்காம் செவ்வியை நோக்கியிருக்கின்ற அழகிய