| இளமங்கையரின் காதல் தன்மையை யொப்ப,அப்பொய்கைகளிடத்துத் திங்களின் வெண்ணிற நிலவென்னும்படியான நிறைந்த முத்துக்களின் கதிரொளி நிறைந்திருத்தலுடன் ஞாயிற்றினது வெப்பக் கதிரொளித்திரள் நிறைந்திருத்தலால் தாமரை மலர்கள் குவியாது மலர்ந்தபடியே யிருக்கலாயின. (வி - ம்.) பொய்கைக்கண் நிறைந்த முத்துத் திரள்களின் கதிரொளி இரவும் பகலும் பரந்திருத்தலானும், ஞாயிற்றொளி பகற்கண் தன் கதிர்களைச் சொரிதலானும் இது பகற்பொழுது இது இராப்பொழுதென உணரலாகாதனவாய்த் தாமரைமலர்கள் கூம்புதலின்றி மலர்ந்தபடியே இருக்கலாயின. தாமரை அரும்புகள் ஞாயிற்றின் ஒளியால் மலர்வன; ஞாயிறு மறைந்து இரவுப் போதுவரின் குவிவன; ஆனால் முத்துக்களின் கதிரொளியால் இரவுப்பொழுதும் பகற்போதுபோல் வெளிச்சமாக இருத்தலால் குவியாதிருந்தனவென அத்தடாகத்தின் ஏற்றமும், அதன்கண் குடவளைக்குலம் ஈன்ற முத்துக்களின் பெருக்கமும் வியப்புறக் குறித்தவாறாம். இது தாமரைகட்கு மயக்கமும் காண்போர்க்கு வியப்பும் தோன்றக் கூறுதலால் அவ்விரண்டுங் கலந்த கலவையணி. ஓடு : மூன்றனுருபு. ஈண்டுத் திங்கட்கதிரோடு ஞாயிற்றின் வெந்தழற் பிழம்பும் ஒன்றுறக் கூறுதலால் உடனிகழ்ச்சிப் பொருள், கூடு பாணி - கூடுகின்ற காலம். வினைத்தொகை. செவ்வி - வாய்த்தநேரம் : அம் நல்லார் - அழகிய மாதரார். காதலின் - காதல் தன்மைபோல. இன் என்னும் ஐந்தனுருபு ஒப்புப் பொருளில் வந்தது. இது தொழிலுவமம். (111) | | மாதரார்க ழுத்தெனும் வளைத்தலைக்கண் வாண்முகப் | | | போதலர்ந்த பங்கயம் பொலிந்திருத்தல் கண்டுநேர் | | | ஊர்திரைத்த டத்திவற்றி னுற்றிருத்த றக்கதென் | | | றாதனம்ப டுத்தவம்பு யத்தையான்ற சங்கமே. |
(இ - ள்.) பெண்கள் கழுத்தென்னும் சங்கினது மேலிடத்தில் ஒளிபொருந்திய முகமாகிய தாமரைமலர், மலர்ந்து விளங்கிக்கொண் டிருத்தலை அறிந்து, நேராக ஓடுகின்ற அலைகளையுடைய தடாகத்தின்கண் ணுள்ள இவற்றின்மீது பொருந்தியிருத்தல் சிறந்ததென்று தாமரைமலர்களைத் தவிசாகக்கொண்டு நிறைந்த சங்குகளானவை இருக்கலாயின. (வி - ம்.) பெண்களின் கழுத்துக்குச் சங்குகளையும், முகத்துக்குத் தாமரை மலர்களையும் உவமமாகக் கூறுவது புலவர் மரபு. அம் முறையில் பெண்கள் கழுத்தாகிய சங்கின்மேலிடத்தில், அதைத் தவிசாகக் கொண்டு அவர்தம் முகமாகிய தாமரைமலர் மலர்ந்து வீற்றிருந்தன. அதைக் கண்ட சங்கினங்கள், நம் இனத்தின்மேல் ஏறியிருந்தமைக்கு நாமும் இத்தடாகத்துள்ள தாமரைமலர்களைத் தவிசாகக்கொண்டு மேலேறியிருக்க வேண்டுமெனக் கருதி, அதில் தங்கியிருப்பதுபோல் காட்சியளிப்பதாகத் தாமரை மலர்மேல் தங்கியிருக்கின்ற சங்கினங்களைக் குறித்தார். இதனால் தம் இனத்தைத் தாழ்மைப்படுத்துவோர்க்கு, அத் தாழ்மைப்படுத்தியோர் இனத்தைத் தாழ்மைப்படுத்தும் அவ்வினத்தார் பண்பு விளங்குவது காண்க. இது தற்குறிப்பேற்றவணி. |