பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்451

கழுத்தென்னும் வளை என்பது, இருபெயரொட்டுப் பண்புத் தொகா நிலைத்தொடர். வாண்முகப்போது, இருபெயரொட்டுப் பண்புத் தொகை. பங்கயம், அதன் மலருக்கு ஆகுபெயர். ஊர் - ஊர்தல். ஆதனம் - ஆசனம். தவிசு, இருக்கை, த, ச, போலி. ஆன்ற - நிறைந்த; ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. சங்கம், இறுதி அம் முச்சாரியை பெற்றது.

(112)

 முன்னநேடி நாடொணாத முன்னவன்மு டிப்புனல்
 இன்னதீதின் வைகினெண்ண மெண்ணியாங்கு முற்றுமென்
 றன்னமாகி யெண்ணில்வேத ராதனத்தி னோடுறீஇ
 மன்னுகின்ற தொக்குமான் மலர்த்தலைக்க ணன்னமே.

(இ - ள்.) முன்னொரு காலத்தில் தேடி அறிதற்கியலாத முதல்வனான சிவபெருமான் திருமுடிக்கண்ணுள்ள கங்கைத் தீர்த்தம் இது; இதனிடத்துத் தங்கினால் நினைத்தவை நினைத்தவாறு கைகூடுமெனக் கருதி, அன்னவுருக்கொண்டு கணக்கற்ற பிரமதேவர்கள் இருக்கையான தாமரை மலர்மீது பொருந்தி நிலைத்திருக்கின்ற தன்மையைத் தாமரை மலர்மேலிருக்கின்ற அன்னங்களின் காட்சி
ஒத்திருப்பதாகும்.

(வி - ம்.) அப்பொய்கையின் படர்ந்துள்ள தாமரை கொடிகளில் பூத்திருக்கிற மலர்களின்மீது அன்னங்கள் பல தங்கியிருக்கின்ற காட்சி, அன்னவுருக்கொண்டு முன்னொருகாலத்தில் சிவபெருமான் முடியைக் கண்டறிய வெழுந்த பிரமதேவர் பலர் இருப்பதாகச் சித்திரித்தார்.

அடி முடி தேடிய வரலாறு : ஒருகாலத்தில் திருமால் பிரமன் இருவருக்கும் நான் பெரியன், நான் பெரியன் என்னும் வாதமெழப் பெரிதும் கலாம் விளைத்து நின்றனர். அதுகாலை அவர்தம் கலாத்தை ஒடுக்கக் கருதி சிவபெருமான் அவ்விருவர் முன் காட்சி கொடுத்து நான் இதோ நும் முன் நெருப்புப்பிழம்பாய் நிற்பேன்; என் அடி முடிகளைக் கண்டறிவோர் பெரியராவர் எனக் கூறி நெருப்பு மலையாய் நிற்க. திருமால் இறைவன் திருவடி காணப் பன்றி உருக்கொடு கீழுலகம் முழுதும் கீண்டுசென்று சென்று காணாது திகைத்துநின்றனர். பிரமன் அன்னப்பறவை உருவெடுத்துப் பலகாலும் பறந்து மேன்மேற் சென்றும் காணாது அலமந்தார் எனப் புராணங்கள் கூறும். அந்நிகழ்ச்சியைக் கொண்டே ஈண்டு இவ்வாறு
புனைந்துரைத்தார்.

இவ் வரலாற்றை,

 1 ". . . . . . . . . . .தனிமுதல் வானவன்
           கேழல் திருவுரு ஆகி ஆழத்
           தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்
           தூழி ஊழி கீழுறக் கிளைத்தும்
           காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
            . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
           பொன்னிறக் கடவுள் அன்னம் ஆகிக்
           கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் "

 1.  1. கோயில் நான்மணிமாலை : 12.