| | விந்தமொப்ப வங்கைவில் விளங்குதேரி னுள்ளிரீஇ | | | உந்துதேரி னாழியொன் றொழிந்துறாமை நல்கென | | | முந்தனாரை நோக்கிமாத வங்குயிற்ற முன்னியாங் | | | கந்தயங்கு நேமியம்பு ளெண்ணிலாத வற்குமே. |
(இ - ள்.) இறைவன் தன் அழகிய கையிற்கொண்டுள்ள மலையாகிய வில்லினை விளங்காநின்ற தேரின் அகத்தே வைத்தலாலே, அவ்விறைவன் ஏறிச் செலுத்தாநின்ற அத்தேர்களின் சக்கரங்கள் தம்முள் ஒன்றும் (அகத்தியனால் அழுத்தப்பட்ட) விந்தமலைபோன்று நிலத்தினுள் அழுந்தி ஒழியாமைப் பொருட்டு அம்முதல்வன்பால் வரங்கோடற்கு அவனை நோக்கி அச் சக்கரங்கள் எல்லாம் ஓரிடத்தே குழுமித்தவஞ் செய்திருந்தாற் போன்று அழகு விளங்கும் எண்ணிறந்த சக்கரவாகப் புட்கள் ஆண்டு உறையா நிற்கும். (வி - ம்.) அகத்தியனால் அழுத்தப்பட்ட விந்தமலை நிலத்தே அழுந்தினாற்போன்றென விரித்துரைக்க. இரீஇ - இருத்துதலானே என்று ஏதுப் பொருட்டாக்குக. ஒன்றும் - எனல்வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. தம்முள் ஒன்றும் ஒழிந்துறாமைப் பொருட்டு என்க. முந்தன் - முதல்வன். நேமியம்புள் - சக்கரவாகம். அதற்கும் - உறையும். (116) வேறு | | அன்ன பொய்கை யருங்கவின் | | | மன்னு மோகை மலிந்தெழ | | | முன்னர் நோக்கு முனிவரன் | | | துன்னி யன்பிற் றுளைந்தனன். |
(இ - ள்.) அத்தகைய தடாகத்தின் அரிய அழகினை நிலைபெற்ற மகிழ்ச்சி மிக்கெழும்படி தன்முன்னே கண்ட அகத்தியன், அத்தடாகத்தை எய்தி அன்போடு ஆடா நின்றனன். (வி - ம்.) தீர்த்தமாகலின் அன்போடு துளைந்தனன் என்க. ஓகை - உவகை. (117) | | தவள நீறுசண் ணித்துமெய்ப் | | | புவனம் போற்றுமுப் புண்டரம் | | | திவள வெங்குஞ் செறித்தனன் | | | இவறு கண்மணி யேய்ந்தனன். |
(இ - ள்.) வெண்ணீற்றினை முன்னர்க் குழையாதே பூசிப் பின்னர்ச் சான்றோராற் போற்றப்படும் முக்குறியை இடவேண்டுமிடமெங்கும் விளங்கும்படி இட்டனன். பின்னர், அவாவுதற்குக் காரணமான கண்மணி வடத்தையும் அணிந்து கொண்டான். (வி - ம்.) தவளம் - வெண்மை. சண்ணித்தல் - பூசுதல், ஈண்டு நீரிற் குழையாதே பூசுதலைக் குறித்தவாறு. புவனம் - ஆகுபெயர். திவள - விளங்க; அசைய என்றுமாம். இவறுகண்மணி - வினைத்தொகை. கண்மணி - அக்கமணி. (118) |