பக்கம் எண் :

456தணிகைப் புராணம்

முதலிய மூவருக்கும் நிரலே, மலருறையும் கலைமகளையும் திருமகளையும் உமையையும் வழங்கியருளிய அறக்கடல் போன்றவனே ! நின்னுடைய பிறையணிந்த சடைமுடியும் புன்முறுவலுடைய திருமுகமும் பரிய தோள்களும் மலையனைய மார்பும் நிறைவுடைய உதரபந்தனமும் ஒளியுடைய கச்சும் எளியேனுடைய விழியின்கண் நிலைபெற்றன.

(வி - ம்.) முறை - தொழில்முறை. இன்னார்க்கின்ன தொழிலென்று பகுத்தமைத்து என்றவாறு. முறைதிறம்ப அருளலாவது யாவர்க்கும் ஒப்பக்கொடாது ஒருவனுக்குக் கலையும் ஒருவனுக்குத் திருவும், ஒருவனுக்குச் சத்தியும் கொடுத்தல். அங்ஙனம் முறைதிறம்பியதற்குக் காரணமும் நினது அறமே என்பார் அறக்கடலே என்று விளித்தார். உதரபந்தனம் - வயிற்றிற் கட்டும் ஓர் அணி. கச்சு - ஆடை.

(124)

வேறு


 குறுமுனி பழிச்சி நிற்பக் குரூஉமதி மிலைத்த வேணி
 அறவனா ரெதிரே தோன்றி யலர்முகத் தருளிச் செய்வார்
 மறைவழி யெம்மை யாதி வராகநல் வழிபா டாற்றி
 உறைதரு மிடம தாகு மவ்வுழி நீயும் வைகி.

(இ - ள்.) இவ்வாறு அகத்தியமுனிவன் வாழ்த்தி நிற்குங்கால் நிறமிக்க பிறையைச் சூடிய சடையினையுடைய அறவாழி அந்தணன் அவன் எதிரே திருவருளுருக்கொண்டு எழுந்தருளி மலர்ந்த முகத்தோடு திருவாய் மலர்ந்தருள்பவர், அகத்திய ! ஆதிவராகமாகிய திருமால் மறைமுறைப்படி எம்மை வழிபாடு செய்திருந்த இடம் அதோ தோன்றுமிடமே யாகும் அவ்விடத்திலேயே நீயுமிருந்து.

(வி - ம்.) குறுமுனி - அகத்தியன், குரூஉமதி - நிறமுடைய பிறை. வேணி - சடை. ஆதிவராகமாகிய திருமால் என்க.

(125)

 எம்மையோ ராண்டு காறு மியற்றுதி பூசை யப்பால்
 கைம்மலை யுலம்பு மோதை கடிப்பிடு முரசி னோடும்
 விம்மிய கணிக வெற்பின் மீமிசை யிவர்ந்து நோற்றுச்
 செம்மலைப் பெறுக வென்னாத் திகழ்தரு மிலிங்கத் தானார்.

(இ - ள்.) எம்மை ஓராண்டு முடியுந் துணையும் நித்தலும் வழிபாடு செய்க ! பின்னர் யானைகள் பிளிற்றொலி கானவர் கடிப்பால் அறையும் குறிஞ்சிப்பறை யொலியோடு முழுங்குதற் கிடமான திருத்தணிகைமலைமிசை ஏறி ஆண்டு நோன்புசெய்து தலைமைத்தன்மையினைப் பெறுவாயாக ! என்று அருளிச்செய்து அம்முனிவனால் நிறுவப்பட்ட திருவருட் குறியிற் கலந்து மறைந்தருளினார்.

(வி - ம்.) கைம்மலை - யானை. ஓதை - ஒலி. முரசு - ஈண்டுக் குறிஞ்சிப்பறை. கணிக வெற்பு - தணிகைமலை. செம்மல் - முருகனுமாம்.

(126)

 அருமறை முறையிட் டின்னு மளப்பருஞ் சோதி யென்று
 மருவுவீ ராட்ட காச வள்ளலங் கருள லோடும்