பக்கம் எண் :

458தணிகைப் புராணம்

 முழுவலி யிளவற் போற்றி முன்னிமென் மலரின் வண்டு
 குழுமிய குமார தீர்த்தக் குருமணிக் கரையைச் சார்ந்தான்

(இ - ள்.) அவ்வாண்டு முடிவுற்ற நாளின் மறுநாளினும் முன் போலவே வராகபுரத்தே எழுந்தருளியிருக்கின்ற இறைவனை வணங்கிப் பின்னர் வீராட்டகாசத்துப் பெருமானையும் பேராற்றலுடைய முருகப் பெருமானையும் வணங்கி வாழ்த்திப் பின்னர் மெல்லிய மலரின்கண் வண்டுகள் சென்று மொய்த்தற்கிடமான குமாரதீர்த்தத்தினது நிறமிக்க மணிகள் கிடக்கும் கரையை எய்தினன்.

(வி - ம்.) வழிவருநாள் - முடிந்தநாளைத் தொடர்ந்து வருநாள். இளவலை - முருகனை. வண்டுமுன்னி மொய்த்த என ஒட்டுக. குரு - நிறம். மணி -
அழகுமாம்.

(130)

 திரைதவழ் தீர்த்த மாடிச் செய்கட னினிது முற்றி
 வரைபுறஞ் சூழ்ந்து வெய்யோன் மணிநெடுந் தேரிற் பூண்ட
 விரைசெலற் கலினப் பாய்மா விறற்குரந் தவழப் பொங்கும்
 புரைமணித் தூளிப் போர்வைப் பொருப்பினை யிவர்ந்து சென்றான்.

(இ - ள்.) அலையெறியாநின்ற அத்தீர்த்தத்திலே ஆடி ஆண்டுச் செய்யக்கடவன வெல்லாம் இனிதே செய்துமுடித்த பின்னர், திருத் தணிகைமலையை வலமாக வந்து ஞாயிற்றுத் தேவனின் அழகிய நெடிய தேரிற் பூட்டப்பட்ட விரைந்த செலவினையும் கடிவாளத்தையும் உடைய குதிரைகளினுடைய ஆற்றன்மிக்க குளம்புகள் கிண்டுதலானே மிக்கு எழுகின்ற உயரிய மணிகளாகிய தூளிகளைப் போர்வையாகவுடைய அம்மலையினை ஏறிச் சென்றான்.

(வி - ம்.) தீர்த்தம் - குமாரதீர்த்தம். வெய்யோன் - ஞாயிறு. கலினம் - கடிவாளம். புரை - உயர்வு. இவர்ந்து - ஏறி.

(131)

 வண்டொடு ஞிமிறு மூசும் வார்மதக் கலுழி யேயன்
 றெண்டிசை யுயிர்க்கு நல்க வெழுபெருங் கருணை நீரும்
 கொண்டலென் றியம்பு மாவச் சகாயனைக் குறுகிப் போற்றி
 அண்டர்சூழ் குமார லிங்கத் தமலனை வணங்கிப் புக்கான்.

(இ - ள்.) வண்டும் ஞிமிறும் வீழாநின்ற நெடிய மதவெள்ளத்தையே யன்றியும் பெரிய திருவருள் வெள்ளத்தையும் எட்டுத்திசைகளினும் வாழும் உயிரினங்கட்கு வழங்குதற்கு எழாநின்ற கடவுள் முகில் என்று ஆன்றோர் கூறுகின்ற ஆவச்சகாய னென்னும் மூத்த பிள்ளையாரை அணுகி வணங்கிப் பின்னர் வழிபடுதற் பொருட்டு வானவர் சூழாநின்ற குமாரலிங்கத்தே எழுந்தருளி இறைவனையும் வணங்கிச் சென்றனன்.

(வி - ம்.) ஞிமிறு - ஒருவகை வண்டு. அன்றி என்னும் வினை யெஞ்சிகரம் செய்யுளாகலின் அன்று என உகரமாயிற்று. நல்கவெழும் என்பதனைப் பிரித்து நீரும் என்பதன் பின்னே ஒட்டுக. ஆவச்சகாயன் ஒரு திருநாமம்.

(132)

 புக்கன னெழுத்தோ ராறும் புகன்றிடு வாயன் சென்னித்
 தொக்கெழு கையன் சிந்தை துற்றெழு முழுவ லன்பன்