பக்கம் எண் :

460தணிகைப் புராணம்

(வி - ம்.) மனு - நூல். நைகரம் - பழுது. பிறங்குதல் - விளங்குதல்.

(135)

 தோலடிப் பவளச் செவ்வாய்த் தொகுசிறை யன்னங் கம்புட்
 பீலியிற் பிளிறு நாரைப் பிரமரத் துழனி பொங்க
 நீலமு மரையும் பூப்ப நிருமித்த தீர்த்தப் பாங்கர்ச்
 சாலவைந் தடக்கி மேலாந் தவமலி யோக முற்றான்.

(இ - ள்.) தோலாலிணைக்கப்பட்ட அடியினையும் பவளம்போன்ற சிவந்த அலகினையும் தொகுக்கப்பட்ட சிறகுகளையும் உடைய அன்னமும், சம்பங்கோழியும், சிறுசின்னம் போன்று கத்துகின்ற நாரையும் வண்டும் ஆகிய இவற்றின் ஆரவாரம் மிகாநிற்பவும், கழுநீர்மலரும் தாமரைமலரும் பூவாநிற்பவும் மனத்தானே படைத்த அத்தீர்த்தத்தின் அயலிலே ஓரிடத்தே இருந்து ஐம்பொறிகளையும் அடக்கி உயரிய தவம் மிகுதற்குக் காரணமான யோகத்தினை எய்தியிருந்தனன்.

(வி - ம்.) தொகுசிறை - வினைத்தொகை. கம்புள் - சம்பங்கோழி. பீலி - சிறுசின்னம் என்னுமொரு ஊதுகுழல். பிரமரம் - வண்டு. ஐந்து சால அடக்கி என்க. ஐந்து பொறிகள். யோகம் - அகத்தொழின் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு.

(136)

 ஒவ்வொரு திங்க ளாக வுறுசுவைக் கனிகண் மூலம்
 எவ்வமில் சருகு தூநீ ரெறிவளி முறையி னுண்டு
 பவ்வமுண் டமைந்தான் பின்னர்ப் பாற்றிய வுணவ னாகித்
 தவ்விய தவநூ றாண்டு செல்லுற முயன்ற காலை.

(இ - ள்.) ஒருதிங்கள் மிக்க சுவையுடைய கனிகளை மட்டும் உண்டும், அடுத்தொரு திங்கள் கிழங்குகளை மட்டும், உண்டும் அடுத்தொரு திங்கள் குற்றமற்ற சருகுகளை மட்டுமே உண்டும் அடுத்தொரு திங்கள் தூய நீரைமட்டுமே பருகியும், அடுத்தொரு திங்கள் வீசாநின்ற காற்றை மட்டுமே உண்டும் இவ்வாறாக அக்கடல்குடித்திருந்த அகத்திய முனிவன் உண்டிருந்து பின்னர் யாதும் உண்ணாமே தான் மேற்கொண்ட தவத்தினை நூறாண்டு கடைபோக முயன்றிருந்த பொழுது.

(வி - ம்.) உறு - மிகுதி. மூலம் - கிழங்கு, வேருமாம். எவ்வம் - குற்றம். வளி - காற்று. பாற்றிய உணவன் - உணவை விட்டவன். தெவ்வுதல் - கொள்ளுதல், மேற்கொண்ட என்க.

(137)

 வளைவகிர்ப் பேழ்வாய்ச் சூட்டு வன்றலைக் கருங்கட் டோகை
 விளைசமர்ப் பூட்கை மஞ்ஞை வெரிந்தலை யிவர்ந்து செவ்வேள்
 துளையிசை நரம்பின் பாட றுந்துமி யெழுந்து விம்மக்
 கிளைஞருங் கணமுஞ் சூழக் கெழுதவச் சூழல் சார்ந்தான்.

(இ - ள்.) முருகப்பெருமான், வளைவோடு பிளவுபட்ட பெரிய வாயினையும் உச்சிக்கொண்டையினையும் வலிய தலையினையும் கரிய புள்ளிகள் அமைந்த தோகையினையும் விளைக்கின்ற போர்த்தொழில்