| | கணிப்பறு பவங்க ளீட்டுங் காழ்மலச் செருக்கை நூறித் | | | தணப்பற வெண்ணெய் போலத் தவிர்ந்தநின் பாத நாயேன் | | | மணப்பமெய்ஞ் ஞான மின்னே வழங்குபு தமிழின் பாடைப் | | | புணர்ப்பினி தருளு கென்னாப் புகன்றுபின் னிதுவும் வேண்டும். |
(இ - ள்.) எண்ணிறந்த பிறப்புக்களைத் தேடித்தருகின்ற காழ்த்த மலத்தாலாகிய செருக்கை அழித்து எள்ளில் நெய் போன்று எப்பொருளிடத்தும் பிரிவின்றிக் கலந்துறைந்த நின் திருவடிகளை அடியேன் பொருந்தும்படி மெய்யாகிய ஞானத்தை இப்பொழுதே வழங்கியருளி மேலும் தமிழாகிய இனிய மொழியறிவும் இனிதே தந்தருள்க ! என்று வேண்டிப் பின்னர் (பின்வரும்) இதனையும் வேண்டுவான். (வி - ம்.) கணித்தல் - எண்ணுதல். பவம் - பிறப்பு. காழ்மலம், வினைத்தொகை. செருக்கு - யான் எனது என்னும் இருவகைப் பற்றுகள். தவிர்ந்த - தங்கிய. எள் + நெய் =எண்ணெய். (144) | | வராகமா புரத்து நாயேன் வணங்கருட் குறியின் வைகும் | | | அராவணி சடையி னானை யமர்ந்துதைப் பூசந் தன்னில் | | | விராவிய வன்பி னோடும் விதிவழி பூசை செய்வோர் | | | தராதலம் வியப்பப் பாவந் தணந்தருங் கதியிற் சேர்க. |
(இ - ள்.) வராகபுரம் என்னும் திருப்பதியின்கண் அடியேன் நிறுத்தித் தொழுத திருவருட்குறியின்கண் வீற்றிருந் தருள்கின்ற பாம்பணிந்த திருச்சடையையுடைய எம்பெருமானை விரும்பித் தைத்திங்களிலே நிகழும் பூசநாளிலே கலந்த அன்பினோடும் சிவாகமவிதிப்படி பூசனை செய்பவர் உலகம் வியக்கும்படி தமது தீவினையெல்லாம் கழியப் பெற்று வீடுபெறுவாராக. (வி - ம்.) அருட்குறி - சிவலிங்கம். அராவணி சடையினான் - சிவபெருமான். அமர்தல் - விரும்புதல். செயலில் விராவிய அன்பென்க. அன்பு ஈண்டு இறைவன்பால் நிகழும் அன்பு ; பக்தி. தராதலம் - ஆகுபெயர், உலகிலுள்ள சான்றோர் என்க. அருங்கதி - வீடுபேறு. (145) | | கன்னியி லடுத்த வோணங் காட்சிநீ கொடுத்த விந்நாள் | | | அன்னதா லிந்த நாள்வந் தடுத்துழி யீங்கென் பேரால் | | | மன்னுமித் தீர்த்தந் தன்னில் வந்துதோய்ந் துன்னைக் கண்டோர் | | | துன்னிய மலங்க ளெல்லாந் துமித்துநின் னருளிற் சேர்க. |
(இ - ள்.) எம்பெருமானே ! எளியேனுக்கு நீ காட்சி நல்கியருளிய இந்த நன்னாள் புரட்டாசித் திங்களிலே திருவோணம் மருவிய மாண்புடையதாகும். அத்தகைய இந்நன்னாள் ஆண்டுதொறும் வந்தெய்தும் பொழுது இத்திருப்பதியின்கண் எளியேன் பெயராலே நிலைபெற்றுள்ள இவ்வகத்திய தீர்த்தத்திலே எய்தி நீராடி நின்னையும் கண்டு தொழுபவர் அநாதியாய்த் தம்பாற் செறிந்த மலங்கள் அனைத்தும் கழியப் பெற்று நின்னுடைய திருவருள் நீழலிலே சேர்ந்தின்புறுவாராக. |