| (வி - ம்.) கன்னி - புரட்டாசித் திங்கள். ஓணம் - திருவோணம். நீ காட்சி கொடுத்த இந்நாள் அன்னதால் என இயைக்க. தீர்த்தம் - ஈண்டு அகத்தியனாலகழப்பட்ட தீர்த்தம். மலங்கள் - ஆணவ முதலியன. அருள் - வீடு. (146) | | ஆதிரை நாளிற் சோம வாரத்தி னாடி னோரும் | | | மேதினி மீது வேண்டு மேதகு செல்வந் துய்த்துக் | | | காதியெவ் வினையு நின்றன் காமரு முலகில் வாழ்ந்து | | | சோதியுட் சோதி யாநின் சுடர்க்கழற் பாதஞ் சேர்க. |
(இ - ள்.) எம்பெருமானே! இத்தீர்த்தத்தின்கண் திருவாதிரை நாளினாதல் திங்கட்கிழமையினாதல் நீராடியவர்களும் இவ்வுலகத்தினும் தாம் தாம் விரும்பிய மேம்பாடுடைய செல்வங்களைக் குறைவறப் பெற்று நுகர்ந்து எத்தகைய தீவினையையும் கெடுத்துப் பின்னர் நின்னுடைய விரும்புதற்குக் காரணமான வீட்டுலகினும் வாழ்ந்து ஒளியினுள் ஒளியாய் நின்ற நின்னுடைய ஒளிபொருந்திய வீரக்கழல் யாத்த திருவடி நீழலிலேயும் எய்துவாராக. (வி - ம்.) ஆதிரை - திருவாதிரை. சோமவாரம் - திங்கட்கிழமை. ஆடினோரும் என்புழி உம்மை இறந்தது தழீஇயது. எவ்வினையும் காதி எனமாறுக. காதுதல் - கெடுத்தல்; கொல்லுதல். காமருமுலகு என்றது பதமுத்தியை. பாதஞ்சேர்க என்புழி பாதம் - பரமுத்தி. (147) | | இன்னபல் வரமு நல்கென் றிரந்தனன் முனிவர் கோமான் | | | அன்னணம் வரங்க ணல்கி யறுமுகக் கடவு ளன்னான் | | | தன்னைநற் றமிழின் பாடை தனக்குமுன் குரவ னாக்கிப் | | | பொன்னிவர் கோயி லுள்ளாற் போதந்து ஞானங் கூறும். |
(இ - ள்.) துறவோர் வேந்தனாகிய அகத்திய முனிவன் மேலே கூறப்பட்ட (வரங்களும்) இன்னோரன்ன வேறுபல வரங்களும் அடியேற் கருளுக ! என்று வேண்டிநின்றானாக; ஆறு திருமுகங்களையுடைய முருகப்பெருமானும், அம்முனிவன் நல்ல தமிழ்மொழிக்கு முதற்குரவனாகும் பேற்றினையளித்து மேலும் அவன் இரந்த வரங்களையும் வழாது வழங்கியருளிப் பின்னர் அழகு தவழாநின்ற தன் திருக்கோயிலுள்ளே (அம்முனிவனோடும்) புகுந்து வீற்றிருந்தருளி அம்முனிவனுக்கு ஞானந் திருவாய்மலர்ந் தருளாநிற்பன. (வி - ம்.) இன்னபல் வரமும் என்றது, முன்னர் 144 முதல் 147 வரையுள்ள செய்யுளிற் குறித்த வரங்களை யுணர்த்தியது. முனிவர் கோமான் - அகத்தியன். அன்னணம் - அவ்வாறே; அவன் வேண்டியவாறே என்றவாறு. நல்லதமிழ் என்றது அழியாமை முதலிய நன்மைகளைக் குறித்தபடியாம். முன்குரவன் - முதன்மையுடைய ஆசிரியன். பொன் - அழகு. போதந்து - புகுந்து. (148) |