பக்கம் எண் :

466தணிகைப் புராணம்

(இ - ள்.) பிரணவம் முதலிலே நிற்ப, ஈற்றிலே சி - வ - ய என்னும் மூன்றெழுத்தும் சேர்ந்து நிற்பவும் ஓதாநின்ற "ஓ நமசிவய" என்னும் இவ்வாறெழுத்தானாய திருமந்திரம் அவ்வேதாகம நூல்களினூடே விரவி ஆங்காங்கு வரும் எவ்வகை மந்திரங்களினுங் காட்டிற் றலை சிறந்த தொன்றாம். அம்மந்திரத்தின்கண் அமைந்த ஆறெழுத்துக்களும் தம்மை ஆதரவுடன் பயில்வோர்க்கு நல்கும் பொருள்கள், இறைவனும் ஐந்து வகைப்பட்ட இறைவியும், இரண்டுவகையான பயன்களும் ஆகும். அவ்வாறனுள் முதற்கண்ணின்ற பிரணவச் சொல்லினின்றே சிறியதொரு விதையினின்று பெரியதொரு ஆலமரம் தோன்றுமாறு போல வேத முதலிய அனைத்து நூல்களுந் தோன்றலாயின.

(வி - ம்.) இது முருகன் கூற்று. தம் திருமந்திரத்திற்கும் இதற்கும் வேற்றுமை ஒரு சிறிது மின்றென்ப துணர்த்தற்கு ஐந்தெழுத்தென்னாது ஆறெழுத்தென்றும் சிவாய என்றும் இரண்டு மந்திரத்தின் பண்புகளும் தோன்றக் கூறினார். இவ்வுண்மையை, "தாரகப் பிரமமாகி, முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்தும் ஒன்றாய், உன் மகன் நாமத்தோரெ ழுத்தென உற்ற வன்றே" எனவரும் கந்தபுராணச் செய்யுளானும் உணர்க. அந்நூலின் விரவும் எனமாறுக. ஆறெழுத்தும் என்றது மந்திரம் என்பது படநிற்றலால் மேலது என ஒருமையாற் கூறினார். அவை என்னுஞ் சுட்டு அவ்வெழுத்தும் எனச் சுட்டி நிற்றலின் ஒருமை பன்மை மயக்க மன்மை யுணர்க. மனு -மந்திரம். பயின்றவர்க்கு அவைதரும் பொருள்கள் எனமாறுக. பஞ்சசத்திகள் என்றது இறைவி என்னும் மாத்திரையாய் நின்றது. இறைவனை இறைவியைத் தருதலாவது ஓதுவோருளத்தே இறைவன் அம்மையப்பனாய் விரைந்து புக்கிருத்தல். இதனை,

 "ஏது மொன்றும் அறிந்தில ராயினும்
           ஓதி யஞ்செழுத் துள்ளுணர் வார்கட்குப்
           பேத மின்றி அவரவர் உள்ளத்தே
           மாதுந் தாமும் மகிழுமாற் பேறரே"

எனவரும் பெரியார் மொழியானும் உணர்க. "அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே" என்னும் சித்தியாரும் அது. இரண்டு பயன் என்றது. பற்றறுதியும், சிவாநுபவமும் என்க. பஞ்சசத்திகளாவன : பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என்பன.

(150)

 ஓமெனு மந்தப் பதந்தனை யுரைத்தோர்
           வேதமா திகளெலா முரைத்தோர்
 தோமறு மந்தப் பதப்பொரு ளுணர்ந்தோர்
           தொக்கநூற் பொருளெலா முணர்ந்தோர்
 ஏமுறு மந்தப் பதப்பொரு ளின்றே
           லிரவியில் வழிவிழி யென்னக்
 காமரு பொறிமற் றிருப்பினுஞ் சற்றுங்
           கதிப்பரி தாகுமா தவனே.