பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்467

(இ - ள்.) பெரிய தவத்தை யுடையோனே ! ஓம் என்னும் ஒலியுடைய அப்பிரணவ மொழியை ஓதியவர் வேதம் ஆகமம் முதலிய எல்லா நூல்களையும் ஓதியவர் எய்தும் பயனை எய்தாநிற்பர். மலமறுதற்குக் காரணமான அம்மொழியினது பொருளையுணர்ந்தவர், தொகுக்கப்பட்ட எல்லா மெய்ந்நூற் பொருளையும் உணர்ந்தவரே யாவர். இன்பமுறுதற்குக் காரணமான அம்மொழி யுணர்த்தும் பொருள் உணர்வு இலதாய்விடின், ஞாயிறு தோன்றாதபொழுது முகத்தில் உள்ள இருவிழிகளும் இருந்தும் பயன் இல்லையானாற்போன்று காமம் வருதற்கு வாயிலான ஐந்து பொறிகளையும் உயிர்கள் பெற்றவிடத்தும் அவற்றால் பயன் கோடல் இல்லையாய்விடும்.

(வி - ம்.) தோம் - அழுக்கு. ஈண்டு - ஆணவமலம். பதப்பொருள். அச்சொல்லின் பொருளாகிய, செம்பொருள், இறைவன். நூலனைத்தாலும் உணரற்பாலது மெய்ப்பொருள் ஒன்றே ஆதல்பற்றி அப்பதப்பொருள் உணர்ந்தோர் நூற்பொருளெலாம் உணர்ந்தோர் என்றார். இரவி - ஞாயிறு. இறைவன் திருவருள் உணர்த்தினாலன்றி உயிர்கள் உணராமையின் அப்பொருளின்றேல் பொறிகளிருப்பினும் கதிப்பரிது ஆகும் என்றார். அரிது ஈண்டு இன்மைமேனின்றது. காமம்வரும் என்பது காமரு எனமருவிற்று. காமரு - அழகிய; அழகிய பொறிகள் எனவும் பொருள் கூறலாம். கதித்தல் ஈண்டு உணர்தல் மேனின்றது.

(151)

 ஆர்த்தவோங் காரப் பொருளெனத் தோன்று
           மாரியன் சைவதன் மங்கள்
 பார்த்திபர்க் கருளல் பாங்கவர் தீயர்
           பகுதிகொண் டளற்றினிற் படாமை
 ஓர்த்துயிர் பலவு முறையினா லோம்பித்
           தீநெறி யுறாவகை யொதுக்கிச்
 சேர்த்திரு பயனுந் தாங்களு மடைவர்
           செருக்கினுந் தெருட்டலுங் கடனே.

(இ - ள்.) இசைத்த ஓங்காரமாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருள் என்னும்படி அதிலிருந்து விரிந்து தோன்றிய சிவபெருமானாற் கூறப்பட்ட சைவாகம அறங்களைச் சிறப்பாக அரசர்களுக்கு உணர்த்துக. அஃதெற்றுக்கெனின், அவர்தாமும், நல்லோரும் தீயோருமாகிய பகுதியைப் பகுத்துணர்ந்துகொண்டு மன்னுயிர்கள் நரகம் புகாதபடி ஆராய்ந்து தீதொரீஇ நன்றின்பாற் புகுதும்படி செலுத்தி மேற்கூறிய இருவகைப் பயனையும் மன்னுயிர்க்கெல்லாம் எய்துவித்தலோடும் தாமும் எய்துந் தகுதியுடையர் ஆகலான். மன்னர்க்கு அறமுணர்த்துங்கால் அவர்தமக்கியல்பான செருக்கினை யுடையராயவிடத்தும் செவ்விநோக்கி அவரைத் தெருட்டுதலும் நல்லாசிரியர்க்குக் கடனாம்.

(வி - ம்.) ஆரியன் - இறைவன்; பரமன் என்றபடி. தன்மம் - தருமம்; அறம். மன்னுயிரெல்லாம் அரசன் வழிப்படுமியல்பினவாகலின் அரசற்குணர்த்திய அறம் மன்னுயிர்க் கெல்லாம் உணர்த்தியவாறாகலின். பாங்கவர் - நல்லோர் என்னும் பொருட்டு, அளறு - நகரம். முறை - செங்கோன்மை. ஏதங்கொண்டு ஊதியம் போகவிடுதல்