பக்கம் எண் :

468தணிகைப் புராணம்

பேதைமை என்பது பற்றிச் செருக்கினும் தெருட்டல் கடன் ஆகும் என்றார். பார்த்திபர் - அரசர். அருளல் : அல் விகுதிபெற்ற வியங்கொள் ; அருள்க என்பது பொருள். தெருட்டல் - தெளிவித்தல்.

(152)

 ஆணவ மாயை காமிய முயிர்க
           ளமலனு மனாதிமெய்ப் பொருளே
 மாணவ காவிப் பொருள்களை யிவற்றை
           வயக்குறும் வாக்கியந் தம்மைப்
 பேணுறு பருவ மடுத்தவர்க் கல்லாற்
           பெறும்பயன் புகழ்முத லொன்று
 காணிய கொடுப்போ ரவரொடு நரகங்
           காணியாக் கைக்கொள்வர் விரைந்தே.

(இ - ள்.) மாணவகனே ! ஆணவம் மாயை கன்மம் உயிர்கள் இறைவன் என்னும் இப்பொருள்கள் அனாதியாயுள்ள உள்பொருள்களாகும். இந்தப் பொருள்களையாதல் இவற்றை விளக்கும் மொழிகளையாதல் பரிபக்குவம் வந்தெய்தப் பெற்றவர்களுக்கு உணர்த்துவதன்றிப் புகழ் பொருள் முதலியவற்றைப் பெறுதல் கருதிப் பக்குவம் இல்லாதவர்கட்கு உணர்த்துவோர், தம்மால் உணர்த்தப்பட்டவரோடு நரகத்தை விரைந்து எய்தாநிற்பர்.

(வி - ம்.) சுத்தமாயை அசுத்தமாயை என மாயையை இரண்டாக்கி,

 "ஏகன் அநேகன் இருள் கருமம் மாயையிரண்(டு)
           ஆகஇவை ஆறுஆதி யில்"

என்றும் கூறுவதுண்டு. இரண்டனையும் மாயை என்பதனுள்அடக்கி இவ்வாசிரியர் உள்பொருள் ஐந்து என்றனர். அனாதி - ஆதியற்றது. மெய்ப்பொருள் - உள்பொருள். பேணுறுபருவம் என்றது, தீதொரீஇ நன்றின்பா னின்றொழுகி மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வு தோன்றிப் பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாகியதொரு செவ்வி என்க. காணிய - செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம், பெற என்பது கருத்து. புகழ் முதலியவற்றைப் பெற விரும்பிப் பக்குவ மில்லாதவர்கட்கு மெய்ந்நூலை ஓதுவிக்கும் ஆசிரியனும் ஓதுவிக்கப்பட்ட மாணவரும் நரகில் வீழ்வர் என்பதாம். மெய்ந்நூல்களை நன் மாணவர்க்கே ஓதுவித்தல் வேண்டும் என்பது குறிப்பு. மாணவகன் என்பது ஈறுகெட்டு மாணவக என விளியாயிற்று. இப் பொருள்களை என்றது, ஆணவம் மாயை முதலாகக் கூறப்பட்ட ஐந்து
பொருள்களை.

(153)

 கரிசறு தான முதலற முணர்த்திக்
           காமரு போகமு மும்மைப்
 பொருளுநன் குணர்த்திப் போக்கரு வீடும்
           புகுத்துமிவ் விறைவன்வாக் கியநேர்