பக்கம் எண் :

472தணிகைப் புராணம்

 அத்தனோ டிரண்டற் றொற்றுமை யாகி
           யானந்தத் தவசராய்த் திளைப்பார்.

(இ - ள்.) இத்தகைய புற வழிபாட்டினை நித்தலும் இறைவனுக்கு ஆற்றி மேலும் மூன்றாவதாகிய யோகநெறியானும் இறைவனை அகத்தே கண்டு வணங்கும் சிறந்த பண்புடையோர்க்கு உணர்ச்சி எழுதற்குக் காரணமான மலநீக்கம் உளதாஞ் செவ்விதேர்ந்து ஒளிருகின்ற மெய்ஞ்ஞானச் செல்வத்தை உள்ளங்கை நெல்லிக்கனியே போல் ஐயந்திரிபற நன்குணரும்படி ஓதுவிக்கின்ற நல்லாசிரியனும், அவன்பால் உடையார் முன்னில்லார் போன்று ஏக்கற்றுநின்று ஓதுகின்ற மாணவகரும், அவ்விறைவனோடு இரண்டறக் கலந்து இறையின்பத்திலே முனைப்பற்று மூழ்கித் திளைப்பர்.

(வி - ம்.) இறைவனை - வேற்றுமை மயக்கம். யோகம் - அகத் தொழில் மாத்திரையானே இறைவன் அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு; உணர்வெழுதற்குக் காரணமான மலநீக்கம் என்க. சிவஞானம் - சிவத்தை உணரும் மெய்யுணர்வு. அத்தன் - இறைவன். ஆனந்தம் - சிவாநுபவம். அவசம் - முனைப்பறுநிலை.

(159)

 உடங்குகேட் பவர்கட் கூறுகள் விளைப்பார்
           வாதமே யுஞற்றுநர் பொச்சாப்
 படங்கலு முடையா ரோதிவே தாதி
           யகற்றினர் சாதியி னிழிந்தோர்
 தொடங்கிய நூலிற் பயன்கொளார் மொழிகள்
           சோர்வுறச் சொல்லுநர் களிப்பு
 மடங்கிலார் தம்மின் மேதகு சாதி
           வருதவர்க் குரைத்திடா ரறிந்தோர்.

(இ - ள்.) ஒருசாலை மாணவராகித் தம்மோடு பயிலுபவர்க்கு இடையூறு விளைப்போர்க்கும், சொற்போர் புரியுமியல்புடையோர்க்கும், பொச்சாப்பு முதலிய தீய பண்புடையோர்க்கும் ஓதியிருந்தும் ஓதியாங் கொழுகாதவர்க்கும், இழிந்த சாதியிற் பிறந்தோர்க்கும் நூலின் பயன் கோடல் தேற்றாதவர்க்கும், மொழிகளைச் சோர்வுறப் பேசுவோர்க்கும், செருக்கடங்கிலாதவர்க்கும், தம்மினும் உயர்ந்த சாதியிற் பிறந்தவர்க்கும் அறிஞர் நூல் ஓதுவித்தல் செய்யார்.

(வி - ம்.) உடங்கு - கூட. ஊறு - இடையூறு. வாதம் - சொற்போர். வேதாதிகளிற் கூறப்படும் ஒழுக்கங்களை அகற்றினர் என்க. நூலிற் பயன்கொளார் என்றது. தொன்னூற்கஞ்சித் தடுமாறுளத்தர் என்றவாறு. மொழிகள் சோர்வுறச் சொல்லுவோர், குழறுவாயர். மேதகுசாதி - வேளாளர்க்குத் தம்மின் மேற்பட்ட சாதியினர் மூவருமாவர்; ஏனையோர்க்கும் நிரலே இருவரும் ஒருவரும் ஆவர் என்க. களிப்பு - செருக்கு. இத்தகையோர்க்கு ஓதுவித்தல் கூடாது என்றவாறு.

(160)