| | கும்பநாற் றிசையும் வைத்துக் கமலம்வாய்க் கொள்ளப் பெய்து | | | பம்புமங் குரங்கால் வார்த்துப் பன்மணித் தவிசாங் கிட்டு. |
(இ - ள்.) அம்மண்டபத்தின் நடுவே வெள்ளிய மாவினாலே தாமரை மலர் வடிவமிட்டு அழகுபடுத்தி அதன் மருங்கினும் நன்கு அணிசெய்து அதன்மேற் புதிய நறுமண மலர்களைப் பரப்பி அதன்மேல் தூயவெண்ணிறப் புதுப்பட்டினை விரித்து நான்குதிசையினும் நிறைகுடம் வைத்து அவற்றின் வாயில் தாமரைமலரிட்டுமூடி பொங்கி முளைக்கும் முளைப்பாலிகை வைத்து நீர்கால் வார்த்துப் பன்னிற மணிகளிழைத்த இருக்கையை அவ்விடத்தே யிட்டு. (வி - ம்.) அம்புயம் - தாமரை. நாப்பண் - நடு. அலங்காரித்து - அலங்கரித்து; அணிசெய்து. வம்பு என்பதற்குப் புதுமை, மணம் என்னும் இருபொருளும் கொள்க. வால் நிறம் - தூயநிறம்; என்றது வெண்ணிறத்தை. கும்பம் - நிறைகுடம். கமலம் - தாமரைப்பூ. பம்புதல் - அடர்ந்தெழுதல். அங்குரம் - முளைப்பாலிகை, ஆகுபெயர். நீர்கால் வார்த்தென்க. கால் முளை யெனினுமாம். தவிசு - ஈண்டு அரியணை. (163) | | அரியணை மீது வெண்புத் தகத்தினை யமைத்து மேலால் | | | வரியிவர் புத்த கத்தை வைத்துரோ சனைகப் பூரப் | | | பரிமளக் கலவை கொட்டிப் பன்மணித் தொடலை தூசு | | | விரிமணத் தொங்க லாதி விசித்திரம் பிறங்கச் சாத்தி. |
(இ - ள்.) அவ்வரியணைமிசை (எழுதாத) வெள்ளேட்டுச் சுவடியை வைத்து அதன்மேல், ஞான நூலை வைத்துக் கோரோசனை கருப்பூரம் முதலிய மணப்பொருட் கலவைச் சாந்தைத் தெளித்து மேலும் பலவாகிய மணிமாலைகளையும் ஆடைகளையும் நறுமணங்கமழும் மலர்மாலைகளையும் அழகுதிகழச் சாத்தி. (வி - ம்.) வெண்புத்தகம் என்றது, பின்னர் எழுதிக்கோடற்குரிய வெள்ளோலைச் சுவடி. வரியிவர் புத்தகம் என்றது. எழுதப்பட்டுள்ள சுவடியை. உரோசனை - கோரோசனை. கப்பூரம் - கருப்பூரம். பரிமளம் - நறுமணம். கலவை - கலவைச் சாந்து. தொடலை - மாலை. தொங்கல் - மாலை. விசித்திரம் - ஈண்டு அழகின்மேனின்றது. பிறங்குதல் - விளங்குதல். (164) | | அருச்சனை யாதி முற்றி யறுசுவை யுணவு மார்த்திக் | | | கருப்புரங் கமழுஞ் சந்து காழகில் குந்தி ருக்கம் | | | மருக்கொள்குக் குலுவோ ரைந்தின் மண்டுதீம் புகைக ளேய்த்துக் | | | குருப்பொலி கபிலை நெய்யாற் கொழுஞ்சுடர் பரப்பிப் போற்றி. |
(இ - ள்.) அருச்சனை முதலியன செய்து முடித்து அறுவகைச் சுவையும் கெழுமிய உணவாகிய மடைகொடுத்துக் கருப்பூரம், சாந்து, அகில், குந்திருக்கம், குங்குலியம் என்னும் ஐவகைப் பொருளுமிட் டெழுப்பிய நறுமணப் புகைகாட்டி நிறத்தாற் பொலிவுடைத்தாகிய ஆனெய்யாலே கொழுவிய சுடரையுடைய விளக்குகளை ஏற்றியாண்டும் பரப்பிவைத்து வாழ்த்துக் கூறித்தொழுது. |