பக்கம் எண் :

476தணிகைப் புராணம்

 பரவுபூ சனைக ளாற்றிப் பயில்வுற வரைக வந்நூல்
 தெரிவுறப் பயிலுங் காலு மிம்முறை பூசை செய்க.

(இ - ள்.) இராக்காலத்தும் பலிகொடுத்து வழிபாடுசெய்து மகளிரை மருவாது இருக்கக்கடவன், அவன் இல்லறத் தலைவனாயவிடத்து, இரண்டு முழத்தில் அமையும்படி மறுநாள் ஒருசிறு மண்டபம் இயற்றி அதன்கண் முன்போல் அந்நூல்களை அமைத்து வழிபாடு செய்து பயில்வானாக. விளக்கமாகப் பயிலும்பொழுதே அவற்றை வெண்சுவடியிலும் வரைந்து கொள்வானாக. அந்நூலைப் பயில்கின்ற ஒவ்வொரு நாளும் இம்முறையில் வழிபாடு செய்தே பயின்று வருக.

(வி - ம்.) உம்மை இறந்தது தழீஇயது. இணைவிழைச்சு - ஆண் பெண் கூடல். இருமுழத்தில்வர எனமாறுக. பரவு பூசனை - வினைத்தொகை. பயில்வுற - வியங்கோள்.

(168)

 முடிவுநாள் பசித்து முக்கண் மூர்த்தியைப் புத்த கத்தைப்
 படியிலாக் குரவன் றன்னைப் பூசனை பயிற்றி யெல்லிக்
 கடிகொண்மங் கலத்தால் வேத வொலியினாற் றுயிலைக் காதி
 விடிவுகண் டருச்ச னாதி விளைத்திர தத்தி னேற்றி.

(இ - ள்.) பயிற்சி முற்றியமுடிவு நாளிலே உண்ணாதிருந்து முக்கட் கடவுளையும் அந்நூலையும் ஒப்பற்ற தனது நல்லாசிரியனையும் வாழ்த்தி வழிபாடியற்றி அன்றிரவில் பூசனையின் பொருட்டுக்கொண்ட மங்கல விசை முழக்கத்தானும் மறைமுழக்கத்தானும் துயிலகற்றி விழிப்புடனிருந்து விடிந்தபின்னர் முன்போல வழிபாடு முதலியன செய்து அந்நூல்களைத் தேரின்கண் எழுந்தருள்வித்து.

(வி - ம்.) முடிவுநாள் - ஓதி முடிந்தநாள். பசித்து - உண்ணாதிருந்து. முக்கண்மூர்த்தி - சிவபெருமான். புத்தகம் - நூல். படி - ஒப்பு. எல்லி - இரவு. கடி - பூசனை. மங்கலம் - ஆகுபெயர், மங்கல இசை. காதி - அகற்றி. இரதம் - தேர்.

(169)

 அறமனை தோறு மாக்கி யவரவ ருடங்கு நண்ண
 மறலினர் நிகளஞ் சீத்து வண்பலி பலவு மோக்கித்
 திறன்மிகு மிறையும் போதச் செறிந்தியம் பலவு நல்க
 நிறைவளர் நகர்சூழ் போந்து நின்மலன் கோயி லுய்த்து.

(இ - ள்.) அறவோர் வாழும் இல்லந்தோறும் எழுந்தருளச் செய்து அவ்வவ் வில்லத்துள்ள அறவோரும் ஒருங்கே குழுமி வாரா நிற்பவும், ஆற்றல்மிக்க அரசனும் இவ்விழாவின் பொருட்டுத் தன் பகைவரைச் சிறைவீடு செய்து ஏனைத் தெய்வங்கட்கும் பூசனை செய்வித்து இத்திருக் கூட்டத்திலே சேர்ந்து வாராநிற்பவும், இன்னிசைக் கருவிகள் பலவும் ஒருங்கே குழுமி முழங்காநிற்பவும், வளநிறைந்த நகரத்தினை வலம்வந்து இறைவன் திருக்கோயிலிற் கொண்டு போந்து.

(வி - ம்.) அறமனை - அறவோரில்லம். எனவே அறவோரல்லாதா ரில்லத்தின்முன் கொடுபோதல் கூடாதென்றாராயிற்று. உடங்கு - ஒருங்கே. மறலினர் - பகைவர். நிகளஞ் சீத்து - சிறைவீடு செய்து,