பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்477

இவ்விழவின் பொருட்டுச் சிறைவீடு செய்து என்றவாறு. பலி ஏனைக் கடவுளர்க்குக் கூறியபடியாம். சீத்துப் போக்கி இறையும் போத என்க. உம்மை - உயர்வு சிறப்பு. நின்மலன் - மலமற்றவன். இறைவன் - ஈண்டுச் சிவபெருமான்.

(170)

 மீட்டுநற் பூசை யாற்றி வேந்தனை யுள்ளிட் டோர்க்குத்
 தீட்டுபுத் தகத்திற் சில்ல வாக்கியந் தெரித்துச் செம்பொன்
 கோட்டமில் குரவற் கீத்துக் கொழும்பொனுந் தூசு மற்றும்
 வாட்டமின் மறையோ ராதி வௌவுற வழங்கல் வேண்டும்.

(இ - ள்.) இறைவன் கோயிலுள்ளே அந்நூல்களை வைத்த பின்னரும் முன்போல வழிபாடு செய்து, பின்னர் அரசனை உள்ளிட்ட அக்குழுவினர் கேட்கும்படி அம்மாணவன் தான் வரைந்துகொண்ட சுவடியினின்றும் ஒருசில அறவுரைகளை எடுத்துக்கூறிப் பின்னர் மனக்கோட்டமில்லாத தன் நல்லாசிரியனுக்குச் செம்பொன் முதலியன வழங்கி மேலும் தம் மொழுக்கத்தே மடியில்லாத அந்தணர் முதலியோர் தாம்தாம். வேண்டியாங்கு முகந்து கொள்ளும்படி கொழுவிய பொன்னும் ஆடையும் பிறவும் இறப்பவழங்குதல் வேண்டும்.

(வி - ம்.) தீட்டுபுத்தகம் - வினைத்தொகை. சில்ல - சில. கோட்டம் - மனக்கோட்டம். ஈத்து - ஈந்து. தூசு - ஆடை. வாட்டம் - மடி. தந்தொழிலில் மடியுறாத மறையோர் என்க.

(171)

 இன்னணம் பூசை யாற்றி னிடரெலா முலகிற் றேம்பும்
 மன்னுறு நன்மை யெல்லா மதிகண்மும் மாரி நல்கும்
 சொன்னவா றீந்து ளாருந் தொகுமெழுத் தொரோவொன் றற்கங்
 குன்னருஞ் சிவலோ கத்து ளொராயிரங் கற்பம் வாழ்வார்.

(இ - ள்.) ஞானநூலுக்கு இவ்வாறு வழிபாடு செய்யப்படின் உலகில் உற்ற இடர்கள் அனைத்தும் நிலைபெறாவாய்த் தாமே இடர்ப்பட்டழியும். நல்லன எல்லாம் உலகின்கண் நிலைபெறாநிற்கும், ஒவ்வொரு திங்களும் மும்மூன்று மழை பொழியாநிற்கும். யாம் இங்குக் கூறியபடி நூல் ஓதுவித்த நல்லாசிரியன்மாரும் தாம் ஓதுவித்த ஒவ்வோரெழுத்திற்கும் ஒவ்வோராயிரங் கற்பம் எண்ணற்கரிய சிவலோகத்திலே சென்று இனிதே வாழ்ந்திருப்பர்.

(வி - ம்.) உலகில் இடர் எல்லாம் இடர்ப்பட்டுத் தேம்பும் என்க. நன்மை எல்லாம் மன்னுறும் எனமாறுக. நன்மை - அறம்பொருள் இன்ப முதலியன. மதி - திங்கள் (மாதம்). நல்குதற்கு வினைமுதல் மதி. ஆங்கு - அசை. கற்பம் - ஊழி. ஒரோ ஒன்றற்கு அங்கு உன்ன அரும் சிவலோகம் எனப் பிரித்துப் பொருள் கொள்க. அங்கு - சிவலோகம் ஆகிய அவ்விடம்.

(172)

 ஆடிவை காசித் திங்க ளடுத்தபூ ரணையிற் பூசை
 நாடினர் தாமு முன்னை நற்பயன் பற்று வார்கள்
 ஏடெழு தூசி பாச மீந்தவ ரெழுதி வைப்போர்
 பீடுறப் பயில்வோர் சொல்வோர் பெரிதரும் பயன்க ளாய்வோர்.