பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்483

சரியை கிரியை என்னும் இருநெறியினும் நிற்போர் படிமத்தினும், யோக நெறியினர் குற்றமற்ற தூய தமது மனமலரினும் காண்பர். மெய்ஞ்ஞானியராகிய அருட்செல்வர் அவ்விறைவனை அங்கிங் கெனாதபடி யாண்டும் காண்பவராவார்.

(வி - ம்.) கரைந்தனம் - கூறினேம். கழிப்பி - இயற்றிமுடித்து. அருள்தலைப் பட்டவர் என்றது சிவாநுபூதியுடையாரை. அறவ - விளி - மோ - முன்னிலையசை. ஒருமுதல் - ஏகனாகிய இறைவன். அந்தணர் வேள்வித்தீயிற் காண்பர் என்க. திருகு - மனமாசு.

(182)

 இறைவனமர் புரிதனக்கு விற்கிடைமூன்
           றயுதநிலத் திரியும் பாவம்
 உறைகஞற்றுங் கங்கைதனக் கதற்கிரட்டி
           யெல்லையிடை யோட்டந் துட்கும்
 மிறைபுரியு மும்மலமும் வேரோடு
           மகழ்ந்தெறிந்து மெய்ஞ்ஞா னத்தின்
 முறைபுரியுஞ் சிவயோகி யிடந்தனக்குக்
           கோடியிடை முடுகி யோடும்.

(இ - ள்.) இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோயிலினின்றும் முப்பதினாயிரம் விற்கிடை தூரத்திற்கப்பாலே தீவினைகள் கெட்டோடாநிற்கும், துளிநிறைத்த சிவகங்கையினின்றும் அறுபதினாயிரம் விற்கிடை தூரத்திலே ஓடிக் கெடுவனவாம். மனத்தைக் கோட்டஞ் செய்யாநின்ற ஆணவம் மாயை கன்மம் என்னும் மூன்று மலங்களையும் வேரோடும் அகழ்ந்து அகற்றி மேலும் மெய்ஞ்ஞான நூன்முறைப்படி இறைபணிநிற்கும் சிவயோகி இருக்குமிடத்தினின்றும் அத்தீவினை கோடி விற்கிடைதூரம் விரைந்தோடிக் கெடும்.

(வி - ம்.) திருக்கோயில் வழிபாட்டினும் சிவகங்கையில் ஆடுதலினும் ஒரு சிவயோகியைக் காண்டல் பன்மடங்கு சிறந்ததாம்.

விற்கிடை - ஓர் அளவு. இரிதில் - கெட்டோடுதல். உறை - நீர்த் துளி. கஞற்றுதல் - நிறைத்தல். ஓட்டந்து - ஓடி. ஒருசொல், மிறை - கோட்டம். மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம் என்பன. துவரக்களைந் தென்பார் - வேரோடும் அகழ்ந்தெறிந்து என்றார்.

(183)

வேறு

 சரியைமுன் மூன்றும் புரிநர்சா லோக
           முதலிய மூன்றுமே சார்வர்
 துரிசறு ஞான முழப்பவ ரிறைவன்
           றொன்னல முழுவதும் பெறுவர்
 விரியொளி மணிகைப் பெற்றவர் பொளிகல்
           விற்றுண விழைவுறா ரதுபோற்
 பிரிவரு ஞானம் பெற்றவர் கருமம்
           பிணைந்ததன் பயன்கொளக் கருதார்.