| (இ - ள்.) சரியை கிரியை யோகம் என்னும் மூன்று நெறிகளினும் நிற்போர் நிரலே சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் பதமுத்திகளையே எய்தாநிற்பர். மலம்முழுதும் அறுதற்குக் காரணமான ஞான நெறியிலே நின்று ஒழுகுஞ் சான்றோர் இறைவனுடைய பழைமையான நலம் முழுவதும் எஞ்சாது பெற்று நுகர்வர். ஒளிவிரிகின்ற நன்மணி கைவரப் பெற்றோர் பொளிந்த அம்மிக் கல் வாணிகஞ் செய்துண்ணக் கருதுவரோ? கருதார் அன்றோ! அங்ஙனமே பெரும்பயனுடைய ஞானங் கைகூடப் பெற்றவர் சிறுபயனுடைய கீழ்ப்படியாயுள்ள கருமம் யோக முதலியவற்றை மேற்கொண்டு அவற்றால் பயன்பெறுதலைக் குறிக்கொள்ளுதலிலர். (வி - ம்.) ஒளிமணி பெற்றோர் குறைந்த முயற்சியில் நிறைந்த பயன்பெறுவர். ஆகலின் நிறைந்த முயற்சியும் குறைந்த பயனும் உடைய அம்மிவிற்றுண்ணுதலைச் செய்யார் என்பது உவமை. புரிநர் - புரிபவர். சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் மூன்றும் என்க. பொளிகல் - அம்மிக்கல். துரிசு - ஆணவமலம். (184) | | வளியுளர் காலும் வெளியினைத் தணவா | | | மாட்சியி னுடலிரு வினையால் | | | நெளிதரு காலுஞ் சாக்கிரா தீத | | | நிலையினிற் பெயர் தரார்க் கவற்றான் | | | விளைவன சற்று மிலையவை யிரண்டும் | | | விமலனே யேற்றவர் தம்பால் | | | உளைவன விழைவ வுஞற்றுநர்க் கடைய | | | வுறுத்துவ னாலுறு தவனே. |
(இ - ள்.) மிக்க தவத்தையுடையோனே ! காற்றுச் சுழன்று வீசும்பொழுதும் தனக்காதாரமான வெளியினைக் கடவாதே அதனுள்ளேயே அடங்கினாற் போன்று சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்த சிவயோகியர் தம்முடல் தாம் முகந்துகொண்டுள்ள இருவகைப்பட்ட பிராரத்த வினைகளாலே மோதப்பட்டு நலிவுறநேர்ந்த காலத்தும் தாம் நிற்கும் அந்நிலையினின்றும் பெயராது நிலைபெறுவர். அத்தகையோர்க்கு அவ்விருவினையானும் நிகழக்கூடிய இன்பதுன்பங்கள் ஒருசிறிதும் இல்லையாகும். அப்பயனிரண்டனையும் இறைவனே ஏற்றுக்கொண்டு அவற்றை அச்சிவயோகியர்பால் துன்புறுதகுநவும் இன்புறுதகுநவும் இயற்றியோர்பால் முறையே எய்துவித்துத் தீர்ப்பன். (வி - ம்.) வளி - காற்று. வெளி - வானவெளி. தணத்தல் - கடந்துபோதல். உடலும் அவர்க்கு மிகை என்பது தோன்ற அவர் என்னாது உடல் நெளிதருங்காலும் என்றார். சாக்கிராதீதம் என்றது. கருவிகளோடும் தொழிற்பட்டு நிற்பதாகிய சகல சாக்கிரத்திற்றானே கருவி ஒன்றனோடும் கூடாது தொழிலிறந்துநிற்கும் நின்மல துரியாதீத நிலை என்க. உளைவன - துன்புறுவதற்கு ஏதுவாவன. விழைவ - விரும்புதற்கு ஏதுவாவன. (185) |