பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்487

(இ - ள்.) பின்னர்த் தவம்புரிதற்குரிய உயர்ந்த குலத்திலே இந்த மண்ணுலகத்தே பிறந்து பேரன்புடனே இறைவனைச் சரியை கிரியை யோக நெறிகளிலே நின்று தீவினை கழியும்படி வழிபாடுசெய்து மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்று ஈற்றில் இறைவனோடு இரண்டறக் கலப்பதாகிய வீட்டின்பத்தே அழுந்துவர். இறைவனுடைய திருவடிகளிலே செலுத்தும் உயரிய அன்பு கடை யிடை தலை என முத்திறப்படும். அவற்றுட் கடையன்புடையோர் தொடர்ந்து இம்மண்ணுலகிலே மூன்று பிறப்பினை அடைந்து மலமொழித்து இறைவனோடு இரண்டறக்
கலவாநிற்பர்.

(வி - ம்.) தவம்புரி குலமென்றது, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் முதலிய நால்வகைச் சாதியுள் மேதகும் ஒழுக்கநெறி நிற்கும் உயர்குடி, என்க. தம்பிரான் - இறைவன். ஆதரவு - அன்பு. துவந்துவம் - தொடர்பாக. தீவினைகளை ஒழித்தென்க.

(189)

 இடையினா தரவு பெற்றவர் சிவலோ
           கத்திடை வாழ்ந்திரு பிறப்புப்
 படிமிசை யெடுத்துத் தேசிக னருளாற்
           பயின்றுஞா னத்தைவீ டுறுவார்
 மடமறு முதன்மை யாதர வுடையார்
           வள்ளலா ருலகுவாழ்ந் தொற்றை
 உடனிலத் தெடுத்து முப்பொரு ளியல்பு
           முணர்ந்தின்பத் துணர்விறந் திருப்பார்.

(இ - ள்.) இறையடிகளிலே இடையன்புடையே சிவலோகத்திலே நீண்டகாலம் வாழ்ந்திருந்து பின்னர் இந்நிலவுலகத்திலே தொடர்ந்து இரண்டு பிறப்பினை எய்தி நல்லாசிரியனைத் தலைப்பட்டு அவனருளால் மெய்ஞ்ஞான நூலைப் பயின்று மெய்யுணர்ந்து வீட்டினையும் எய்துவர். அறியாமையகன்ற தலையன்புடையோர் சிவபெருமான் உலகத்திலே வாழ்ந்திருந்து இவ்வுலகில் ஒருபிறப்புற்று அப்பிறப்பிலேயே முப்பொருள் இயல்பும் உணர்ந்து சீவன்முத்தராய் வீடு பேறடையா நிற்பர்.

(வி - ம்.) படி - மண்ணுலகம். தேசிகன் - ஆசிரியன். மடம் - அறியாமை. முதன்மையாதரவு - தலையன்பு. வள்ளலார் - இறைவன். இன்பத்துணர் விறந்திருத்தல் ஞானநிட்டை எய்தியிருத்தல்; வீடுமாம்.

(190)

வேறு

 முனிவ ஞானயோ கத்தினர் பெருமையை மொழிந்தன முலகத்தோர்
 துனிவு தீர்தரப் புரிதரு தருமமுஞ் சொல்லுது மறிதன்மம்
 கனிவி னீதலே யெரியினை யோம்பலே கடவுளா லயஞ்செய்தல்
 புனிதன் பூசனை நான்குமா மிவற்றினாற் புகுதரும் பலமெல்லாம்.

(இ - ள்.) முனிவனே ! இதுகாறும் ஞானநிட்டையையுடைய சிவ யோகியர் பெருமையைத் தெரியக்கூறினாம். இனி, இந்நிலவுலகத்தில்