பக்கம் எண் :

490தணிகைப் புராணம்

உண்டியும் ஆடையும் அரிய கலங்களும் முதலிய அவர் வேண்டிய கொடைப் பொருளெல்லாம் வழங்கக் கருதமாட்டார்.

(வி - ம்.) அறிந்தோர் சிவயோகியர்க்கே வழங்குவர் என்றவாறு. அந்தணாளர் - பார்ப்பனர். பிச்சைக்கு வந்துற்ற ஞானியர் என்க. தூசு - ஆடை. அருங்கலன் - உருத்திராக்கமணி முதலியன. ஒருமித்தவர் - கலந்தவர்.

(195)

 தென்பு லத்தவர்க் குரியநாண் ஞானியர்க் கருத்துநர் சிவலோகத்
 தின்ப ருந்துற மூவெழு சுற்றமு மிருப்பரூட் டினர்நம்பால்
 அன்பின் வந்தனை புரிந்துதம் மனையிடை யடுத்தஞா னியர்க்கூட்டின்
 துன்ப மல்கள றொரீஇயவர் குலமெலாந் துன்னுவர் சிவலோகம்.

(இ - ள்.) தென்புலத்தவர்க்குக் கடன்செய்யும் நாளிலே சிவ ஞானியர்க்கு உணவூட்டினோர் சிவலோகத்தே சென்று இன்புற்றமர்ந்து வாழாநிற்பர். மேலும் அவர்தம் இருபத்தொரு தலைமுறை முன்னோரும் சிவலோக மெய்தாநிற்பர். நம்மிடத்தே மெய்யன்போடு வழிபாடியற்றித் தம்மில்லத்தே வந்தெய்திய சிவஞானியர்க்கு உணவு முகனமர்ந்து அருத்தியவர் குலத்திற் றோன்றிய முன்னோர் அனைவரும் துயரஞ் செறிந்த நகரத்தினின்றும் விலகிச் சிவலோக வாழ்க்கை
எய்துவர்.

(வி - ம்.) தென்புலத்தவர் - படைப்புக்காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி. மூ வெழு சுற்றம் - இருபத்தொரு தலைமுறை மூதாதையர். நம்பால் (முருகன்பால்). அமலுதல் - செறிதல்.

(196)

 கொண்டு விற்றல்கூ லித்தொழி லுழுதல்பொய் கூறுதல் வெகுளித்தீ
 மண்ட லென்றவற் றலகிடன் மெழுகறீ வளர்த்தனீ ரரிசிக்கண்
 உண்டு பாவமீ தொழிவுறு மைம்முகத் தொருவனை யெரிதன்னைக்
 கண்ட ஞானியைக் குரவனை நித்தலும் பூசனை காண்பார்க்கே.

(இ - ள்.) சந்தைகளிற் பொருள்களைக் கொண்டு விற்றலும் கூலித் தொழில் செய்தலும் உழுதலும் இவற்றின் பொருட்டுப் பொய்கூறுதலும் சினத்தலும் என்ற இவற்றோடு அலகிடலும் மெழுகலும் தீவளர்த்தலும் நீர் எடுத்தலும் அரிசி குற்றுதலும் ஆகிய இவற்றால் பாவம் உண்டாதலும் உண்டு; இத்தகைய பாவங்கள் சிவபெருமானையும் வேள்வித் தீயினையும் தம் மெதிர்கண்ட சிவயோகியையும் ஆசிரியனையும் வழிபடுவார்க்குத் தீர்ந் தொழிவனவாம்.

(வி - ம்.) அலகிடல் மெழுகல் முதலியவற்றால் சிற்றுயிர்கள் இறத்தலுண்மையின் பாவம் உண்டாம் என்றார். இல்லறத்தோர் இப் பாவங்களைச் செய்யாதிருத்தல் இயல்வதன்று. எனவே இதற்குங் கழுவாய் கூறியபடியாம்.

(197)

 எடுத்த வையிரு தொழிலையு மியம்பிய விறைவனா தியர்க்கென்றே
 தொடுப்பிற் பாவங்க ளிலைதமக் கென்றிடிற் சூழுமவ் வொருபானால்
 அடுக்கும் பாவமும் விதித்தன விலக்கின வகற்றியாற் றலின்வேறு
 மடுக்கும் பாவமுந் தபவெணிற் செய்கமுன் வகுத்தவர் தமைப்பூசை.