பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்491

(இ - ள்.) இங்கு யாம் எடுத்துரைத்த பத்துத் தொழிலையும் இறைவன் முதலியோர் வழிபாட்டின் பொருட்டே இயற்றுமிடத்தே பாவங்கள் உண்டாகமாட்டா. தம் பொருட்டே செய்யுமிடத்தே அப்பத்துத் தொழிலானும் உண்டாகும் பாவங்களும், அற நூல் விதித்தவற்றைச் செய்யாமையானும் விலக்கியவற்றைச் செய்தலானும் இன்னோரன்ன பிறவழிகளானும் உண்டாகும் பாவங்களும் தீர்தல் வேண்டின் யாம் முற்கூறிய இறைவன் சிவயோகியர் முதலியவர்க்கு வழிபாடியற்றுக.

(வி - ம்.) ஐயிரு தொழில் என்றது முற்செய்யுளில் கொண்டு விற்றல் முதலாக அரிசிகுற்றல் ஈறாக எடுத்தோதப்பட்ட பத்துத் தொழில்களையும். ஒருபான் - ஒருபத்து. விதித்தன விலக்கின என்னுமிவற்றோடு அகற்றி ஆற்றலின் என்பவற்றை நிரனிரையாக ஒட்டுக. தப - கெட. வகுத்தவர் - வகுக்கப்பட்டவர்.

(198)

 ஈச னாதியர்க் களித்தவூ ணவிழொன்றற் கீரைஞ்ஞூ றெனுமாண்டு
 தேசு லாஞ்சிவ புரத்திருப் பார்செழுங் கருனைநெய் ததிகூடில்
 பேசும் வான்பயன் றசமடங் காம்பெருஞ் சுவையசொன் றியின்பேதம்
 வாச நோலையா திகட்குநூ றாயிர வரிசையி னுயர்கிற்கும்.

(இ - ள்.) இறைவன் முதலியோர்க்கு வழங்கிய உணவின்கண் அமைந்த வெண்பருக்கை ஒன்றனுக்கு, வழங்கியவர் ஆயிரம் யாண்டு ஒளிவுலவும் சிவலோகத்து வாழும் பேற்றினை எய்துவர்; செழிப்புடைய பொரிக்கறியும் நெய்யும் தயிரும் அவ் வெண்சோற்றோடு கூட்டி வழங்கின் கூறப்படும் பயன் பத்துமடங்காக மிகும். மிக்க சுவையுடைய சித்திரான்ன வகை, மணமுடைய எள்ளுண்டை முதலியவற்றிற்கு நூறாயிரமடங்கு வரைநிரலே பயன் உயராநிற்கும்.

(வி - ம்.) அவிழ்- பருக்கை. ஐஞ்ஞூறு - நகரத்திற்கு ஞகரம் போலி. தேசு - ஒளி. கருனை - பொரிக்கறி. ததி - தயிர். தசம் - பத்து. நோலை - எள்ளுண்டை. சொன்றி - சோறு. பேதம் - வகை. அக்காரவடிசில் முதலியன. செந்நெற்சோறு சம்பாச்சோறு முதலியனவுமாம்.

(199)

 சிறந்த வேடத்தி னடுப்பினு மஃதின்றிச்
           சேரினு மொழுக்கெல்லாம்
 அறிந்து ளாரெனச் சாரினு முள்ளவ
           ரெனவரு வாரேனும்
 அறிந்த மெய்யடி யார்களைப் பரமென்றே
           யயிர்ப்பறத் தெளிந்தன்பால்
 பிறந்த வான்பயன் பெறவுளம் விழைந்துளார்
           பெரிதும்பூ சனைசெய்வார்.