பக்கம் எண் :

492தணிகைப் புராணம்

தோர் என்று வரினும் ஞானவொழுக்கமே மேற்கொண் டொழுகுவோர் என்று வந்தாலும் மெய்யுணர்ந்த அவ் அடியார்களை இறைவனேயாகக் கருதி ஐயமறத் தெளிந்து மெய்யன்போடு நன்கு வழிபாடு செய்வர்.

(வி - ம்.) வேடம் - ஞானவொழுக்கத்திற்கேற்ற வடிவம்.

 "செம்மலர் நோன்றாள் சேறல் ஒட்டா
           அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
           மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
           ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே"

என்பது சிவஞானபோதம் (சூ. 12)

(200)

 அடியர் தங்களை யாசுரைத் தவரது கேட்டவர் கேட்பித்தோர்
 உடன்வி ராவினர் மூட்டின ருடன்பட லுற்றவ ரிவரெல்லாம்
 விடிவில் வெந்நர கழுந்துவ ராதலான் விமலமெய்ப் பொருளென்றே
 கடிகொள் பூசனை புரிவத லாற்கரி சடியர்பா லுரையற்க.

(இ - ள்.) அகத்தியனே ! சிவனடியாரைக் குற்றங் கூறினோரும், அது கேட்டுநின்றோரும் கேட்கும்படி செய்தவரும் கூடிநின்றோரும், குற்றங் கூறும்படி செய்தவரும் அதற் குடன்பட்டிருந்தோரும் ஆகிய இவரெல்லாம் மீளாத கொடிய நரகத்திலே அழுந்துவர். ஆதலான், மெய்யடியார்களைக் கண்டவிடத்தே இறைவன் என்றே கருதிச் சிறந்த வழிபா டியற்றுதலே செய்க. அவர்பாற் குற்றங் கூறாதொழிக.

(வி - ம்.) ஆசு - குற்றம். அது - அவ்வசை மொழியை. குற்றங் கூறுவோருடன் கூடியவர் என்க. மூட்டுதல் - குற்றங்கூறுதற் கேற்ற செவ்வியை உண்டாக்குதல். விமலம் - தூய்மை. மெய்ப்பொருள் - இறைவன். கரிசு - குற்றம். உரையற்க - உரைக்கவேண்டா.

(201)

 மனத்தி னால்வடி வாலவ மதிக்கினும் வாய்பிள வாக்கும்பி
 இனத்தி னோடுவீழ்ந் தழுந்துவ ரவற்றினு மியல்பலா தனசெய்யல்
 நுனித்த வாலறி வுடையவ பாத்திர நுவன்றும்பாத் திரமல்லான்
 தனக்கி யாவதும் புரியலென் றாமவன் றன்மையுங் கிளப்பாமால்.

(இ - ள்.) சிவனடியவரை மனத்தானும் உடலானும் அவமதித்தாலும் அங்ஙனஞ் செய்தோர் தம்மை விழுங்கிய பின்னர் ஒருபொழுதும் வாயைத் திறந்திடாத கொடிய நரகத்திலே தம்முடைய சுற்றத்தாரோடு வீழ்ந்து அழுந்தாநிற்பர். அவமதியாமையோடும் அவர்பால் தீயசெயல்களைச் செய்யாதொழிதல் வேண்டும். கூர்த்த தூய அறிவுடையோயே ! ஈண்டு ஈதற்குரிய நற்பாத்திரத்தை விளக்கினோம். மேலும் பாத்திரமல்லாதானுக்குச் சிறிதும் வழங்குதல் வேண்டா என்றும் கூறினோம். பாத்திரமல்லாதான் தன்மையும் இனிக் கூறுவாம் கேட்பாயாக !

(வி - ம்.) வடிவம் - ஈண்டு உடன்மேனின்றது. உடலால் அவ மதித்தலாவது, கண்டுழி எழாமையும் எதிர்கொள்ளாமையும் முதலிய செயலால் அவமதித்தல். கும்பி - நரகம்; வாய்பிளவாக் கும்பி என்றது