பக்கம் எண் :

494தணிகைப் புராணம்

(இ - ள்.) இருவகைப் பாத்திரமும் உயிர்களேயாக அவற்றுள் ஓருயிர் பயன் உண்டாக்க மற்றொன்று பயன் உண்டாக்கமாட்டாமைக்குக் காரணம் யாதோ என்று இறைவன் மொழிக்கண் சிறிதும் ஐயங் கொள்ளல் வேண்டா. நீரின்கண் அழுந்தாத புனைமரத்தின்மேலே பொருத்தப்பட்ட இரும்பு தன்மேற் குவிக்கப்பட்ட பெருஞ்சுமையை அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அந்தமரத்தினன்றி அழுந்து மரத்திலே பொருந்திய இரும்பு தன் சுமையோடு தானும் முழுகியொழியும் அன்றோ உயிர்களைக் காத்தருளும் இறைவனோடு கலந்த சிவயோகியர் நன்மை யுண்டாக்கலும் ஏனையோர் உண்டாக்காததுமாகிய இந்த முறைமையையும் அத்தன்மைத்தே என்று கொள்க.

(வி - ம்.) ஆத்தன் - இறைவன். அயிர்த்தல் என்பதன்கண் அல் விகுதி எதிர்மறைப் பொருளது "மகனெனல்" எனவரும் திருக்குறளிற் போல. அழுந்தாத மரம் என்றமையால் அழுந்தும் மரத்து ஒன்றினால் எனக் கொள்க. அயம் - இரும்பு. கனம் - சுமை. இந்த முறைமையும் அது என இயைக்க.

(204)

 குருடர்முட வர்கள்விருத்தர் நோயி னோர்நல்
           குரவுடையோர் பாலகரா தியரு மீவோர்க்
 குருகலுறு மிரக்கமிகி னளிக்கத் தக்கா
           ரொற்றையங்காற் கொடிஞ்சிமணிப் பொலந்தே ரூரும்
 பரிதிநடு வானெழுங்கால் வந்தோ ரெல்லாம்
           பாத்திரமென் றவர்தமக்கும் பரிந்து பூசை
 புரிகவினி யருந்தவதா தாவென் பாரைப்
           புகன்றுபின்பா தரவுமற்றும் புகல்வா மன்றே.

(இ - ள்.) ஈண்டுக் கூறப்பட்ட பாத்திரமாவாரேயன்றிக் குருடரும் முடவரும் முதியோரும் பிணியாளரும் வறுமையுடையோரும் சிறாரும் இன்னோரன்னோரும் வள்ளன்மை யுடையோர்க்கு மனமுருகுதற்குக் காரணமான இரக்கம் மிக்க விடத்தே ஈதற்கேற்ற நல்ல பாத்திரங்களே ஆவர். அரிய தவத்தை யுடையோனே ! இனி ஒற்றைச் சக்கரத்தையும் கொடிஞ்சியையும் உடைய அழகிய பொன் தேரினை ஊராநின்ற ஞாயிற்று மண்டிலம் வானத்தின் நடுவில் வரும்பொழுது இரக்க வருவோரெல்லாம் நல்ல பாத்திரங்களே அவருள் பாத்திரம் அபாத்திரம் ஆராயாது வேடமுடையோர் அனைவருக்கும் அன்புற்று வழிபாட்டோடு வழங்குக. இனி வள்ளன்மையுடையோர் பண்புணர்த்திப் பின்பு அன்பின் தன்மையையும் பிறவும் கூறுவாம்.

(வி - ம்.) கொடிஞ்சி - ஒருவகைத் தேருறுப்பு. பொலம் - பொன். பரிதி - ஞாயிறு. உச்சிப் பொழுதில் பசித்து வருவோரெல்லாம் நற் பாத்திரமே அப்பொழுதுற்ற சிவவேடமுடையாரை ஆராயாது வழிபட்டு வணங்குக என்றவாறு. தாதா - வள்ளல். ஆதரவு - அன்பு.

(205)

 வணக்கம்வரை யாதளித்த லுறவு கோப
           மாற்றலிரக் கமுமுடையார் தாதா வென்பார்