| ஈவோர்க்குப் பயன் உண்டாகுக என்று கருதி ஏற்றுக்கொள்ளும் இயல்புமுடையன் ஆவன். அத்தகைய சிவஞானியர்க்கு அன்பளாவிய இரக்கத்தோடு வழங்கியவன் அச்சிவஞானியரோடு சிவலோக மெய்தி இன்புற்று வாழ்வன். அன்போடளாவிய இரக்கமின்றி புகழ் முதலியன கருதி ஈந்தோரெல்லாம் கொடிய நரகத்தே தம்பால் ஏற்றவரோடும் சேர்ந்து வீழ்ந்தழுந்துவர். (வி - ம்.) பாங்கர் - இடம். அண்மி - சென்று. அவன் - மெய்ஞ் ஞானி. ஈத்திடுக - வீத்திடும் என்பன இரண்டும் எதுகை நோக்கி வலித்தன. வீத்திடும் - வீந்திடும், இல்லையான. வீத்திடு மாதரவிரக்கம் என்றது ஆதரவிறந்த இரக்கம் என்றவாறு "அருங்கேடன்" என்புழிப் போன்று கொள்க. (207) | | தருகவெனு மிடியர்தமை யொருவி யன்னோ | | | தக்கபெரி யவர்யாங்க ணுள்ளா ரென்று | | | துருவுநர்கள் சிறத்தவர்க ளல்ல ரில்லாத் | | | துப்பினரில் லாயினற மின்றே யன்றோ | | | மருவியுளத் தெழுங்காதல் பத்தி யற்றான் | | | வழாதுகடைப் பிடித்திடுதல் சிரத்தை யிந்த | | | இருதிறத்தி னின்சொன்முதல் கொண்டு செய்யு | | | மினிமையா தரவுவிதி வழிபா டாதி. |
(இ - ள்.) தம்பால் வந்து யாம் வறுமையால் நலியாநின்றேம் யாதேனும் ஈந்தருள்க என்றிரக்கும் வறியோரைக் கடிந்தகற்றிவிட்டு அந்தோ! ஈதற்குச் சிறந்த பாத்திரமாம் பெரியோர் யாண்டுளர் என்று தேடித் திரிவது பேதைமை; இத்தகையோர் சிறந்த வள்ளல்களல்லர். வறியவர் இருத்தலானன்றோ உலகில் அறம் என்பதொன்றுளதாயிற்று. இவரிலரேல் அறமுமில்லை. இனி இது கிடக்க. ஆதரவு முதலியன கூறுதும். இயல்பாகவே உள்ளத்திருந்து எழாநின்ற அன்பே பத்தி எனப்படும். அவ்வன்பின் செயல்களை வழுவாது கடைப்பிடித் தொழுகல் சிரத்தை எனப்படும். இந்த அன்பானும் சிரத்தையானும் இன்சொல் முதலியவற்றால் விருந்தினர்க்குச் செய்யும் இனிமையே ஆதரவு எனப்படும். இனி இவ்வாதரவாற் செய்யும் வழிபாடு முதலியவற்றிற்கு. (வி - ம்.) ஒருவுதல் - கடிந்தகற்றுதல். அன்றோ - குறிப்புமொழி அவர்தம் பேதைமைக்கு நூலாசிரியர் இரங்குகின்றார். துருவுதல் - தேடித் திரிதல். சிறந்தவர் - சிறப்புடைய வள்ளல்கள். இல்லாத்துப்பினர் - துப்பில்லாதார்; வறியவர். இல்லாத் துப்பினர் இல்லாயினறமு மின்றே என்றது. | | "இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞால | | | மரப்பாவை சென்றுவந் தற்று" (குறள். 1258) |
என்னும் அருமைத் திருக்குறட் கருத்தை இவ்வாசிரியர் பொன்போற் போற்றிக் கொண்டவாறாம். வாழிபாடாதி என்பது அடுத்த செய்யுளிற் சென்று முடியும். (208) |