பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்499

வன் பூசனையாகிய சரியை முதலிய வழிபாட்டு நெறியிலே நிற்பவரே இறுதியாக மெய்யுணர்வும் கைவரப்பெற்று ஆணவ முதலிய மலங்களெல்லாம் துவர நீங்கப்பெற்று முழுப்பாழாகிய அறிவு வெளியிலே இரண்டறக் கலந்து வாழ்பவரும் ஆவர். சினந்த தீவினைகளை அகழ்தற்குரிய வழிபாட்டுறுப்புகளில் யாதொன்றும் மேற்கொள்ளாமல் வழிபாடுமட்டும் இயற்றினோரும் உண்மையான பயனை எய்துவர். அந்தப் பயனையும் இனி விரித்துக் கூறுவேம் கேட்பாயாக.

(வி - ம்.) கைத்து - கையகத்துள்ளது. அமலன் - இறைவன். பெட்டவர் - விரும்பியவர். எல்லாம் - மலமனைத்தும். பாழ்வெளி என்றது பற்றற்ற அறிவுவெளியை. பைத்த - சினந்த.

(212)

வேறு

 அழுக் குளத்தினு முடலினு மறாதொரு நாளருச் சனைசெய்தோர்
 வழுக்கு வன்றடி விழைந்துணுங் குய்யக வுலகினை மரீஇவாழ்வார்
 ஒழுக்கு வெஞ்சினக் கண்ணரா யிருதின மும்பனுக் கலரிட்டோர்
 விழுக்க ளுண்டுதேக் கெறிதரு மரக்கர்வாழ் வியனுல கமர்கிற்பார்.

(இ - ள்.) நெஞ்சினும் உடலினும் அழுக்கறாமல் ஒருநாள் இறைவனை வழிபட்டோர் வழுக்குடைய வலிய தசையை விரும்பித் தின்னும் குய்யகர் உலகத்தை எய்தி வாழாநிற்பர். தீக்காலும் வெவ்விய சினத்தையுடைய கண்ணையுடையராய் இரண்டுநாள் இறைவனை வழிபட்டோர் சிறந்த கள்ளையுண்டு தெவிட்டற்குக் காரணமான அரக்கர் வாழ்கின்ற அகன்ற உலகத்திலே சென்று வாழாநிற்பர்.

(வி - ம்.) உளத்திற்கு அழுக்குக் காம முதலியன. உளத்தினும் உடலினும் அழுக்கறாது என ஒட்டுக. வழுக்கு - வழும்பு. குய்யகர் - பேய்கள் தீயொழுக்கு வெஞ்சினம் என்க. உம்பன் - இறைவன். விழு - விழுமமுமாம். தேக்கெறிதல் - தெவிட்டல். வியன் - அகலம். அமர் கிற்பார் - அமர்வார்.

(213)

 நயக்க மூன்றுநா ணம்பன்பூ சனைநனி நடவிய வூன்றின்போர்
 இயக்கர் வாழுல கத்தினை யெய்துவ ரின்னிசை பாத்தன்மை
 வியக்கு மெய்ப்பொரு ளறிகிலார் நான்குபா விமலன்மு னுரைத்தாடின்
 உயக்க மோப்புகாந் தருவத்தை யேய்ந்தின்ப வுததியிற் படிவாரால்.

(இ - ள்.) அன்புடைமையால் இறைவனும் விரும்பும்படி அவ்விறைவனை மூன்றுநாள் வழிபாடு மிகவும்செய்த ஊனூண் உடையோர் இயக்கர் வாழும் உலகினை எய்தாநிற்பர். இனிய இசையின்றன்மை பாட்டின் தன்மை வியத்தற்குரிய பொருளின் தன்மை முதலியவற்றை அறிகிலார் எனினும், நான்குநாள் இறைவனைப் பாட்டினாலே வழிபட்டு அன்பாலே ஆடியவர் வருத்தத்தை ஓட்டாநின்ற கந்தருவ வுலகத்தை எய்தி ஆண்டு இன்பக் கடலிலே மூழ்காநிற்பர்.

(வி - ம்.) நான்கு - நான்குநாள். நயக்க - விரும்ப. நடவிய - நடத்திய. இசைத் தன்மை, பொருட் டன்மை எனவும் தன்மையை இவற்றோடும் ஒட்டுக. ஆடுதல். அன்பின் மெய்ப்பாடென்க. உயக்கம் - வருத்தம். ஓப்புதல் - வெருட்டுதல். ஆல் - அசை.

(214)