பக்கம் எண் :

500தணிகைப் புராணம்

 உலகுளார் தமைப் புகழவேட் டைந்தின மும்பன்பூ சனைசெய்தோர்
 இலகு வானிறை யுலகுறு பல்வகை யின்பமுந் திளைப்பாரால்
 திலக வாணுத லார்விழை வாலறு தினம்பரிந் தனர்செய்தோர்
 நிலவு வான்மதி யுலகில்வேட் டாங்கின்ப நித்தலு நுகர்வாரால்.

(இ - ள்.) உலகமக்கள் தம்மைப் புகழவேண்டி ஐந்துநாள் இறைவனை வழிபட்டோர் விளங்காநின்ற இந்திரன் உலகிலுள்ள பல்வேறு வகைப்பட்ட இன்பத்தையும் நுகராநிற்பர். திலகமிட்ட ஒளிநெற்றியை உடைய மகளிர்பால் விருப்பத்தாலே, ஆறுநாள் அன்புடையராய் இறைவனை வழிபட்டோர் நிலாவினையுடைய வெண்டிங்கள் உலகிலே சென்று தாம் விரும்பியபடி சிறந்த மகளிரைக் கூடி நாடோறும் இன்புறாநிற்பர்.

(வி - ம்.) வானிறை - இந்திரன். திலகம் - பொட்டு. மதியுலகு - திங்கண்மண்டிலம். நித்தலும் - நாடொறும்.

(215)

 வேறு வேறுள விழைவினா லெழுதினம் விளங்குபூ சனைசெய்தோர்
 ஈறு சேரரும் வளம்பதிப் பிரமலோ கத்திலின் பினிதார்வார்
 கூறி வேதகா யத்திரி யெட்டுநா ளருச்சனை குயின்றோரும்
 ஊறு போகங்கண் முழுவது மப்பதி யுண்டுளப் பரிவீர்ப்பார்.

(இ - ள்.) மகளிர் விழைவேயன்றிப் பொன் நில முதலிய பல்வேறு விழைவின்பொருட்டு இறைவற்கு ஏழுநாள் விளங்காநின்ற வழி பாட்டினைச் செய்தோர் இறுதி எய்துதல் இல்லாத வளமுடைய உலகமாகிய பிரமலோகத்தை எய்தி இன்புற்றமர்வர். எட்டுநாட்கள் மறையின் கண்ணதாகிய சிவகாயத்திரி மந்திரமோதி வழிபட்டோரும் ஊறாநின்ற போகங்கள் அனைத்தும் நுகர்ந்து அப்பிரமலோகத்தே சென்று துன்பந் தீர்ப்பர்.

(வி - ம்.) மகளிர் காமவிழைவன்றி வேறுவேறுள விழைவு என்க. இன்பு - இன்பம். காயத்திரி கூறி எனமாறுக. குயிலுதல் - செய்தல். ஊறுபோகம் - வினைத்தொகை.

(216)

 ஒருவ னேயொரு மூவரென் றொன்பது தினமருச் சனையுய்த்தோர்
 பெருகு போகங்கள் வைகுந்த வெல்லையிற் பெட்டபெட் டாங்கேய்வார்
 பொருளி னாலொழுக் காலிழிந் தோர்களும் பொருவிலன் புளதாமேல்
 திருநி லாவியான் றவர்க்குமுன் னுரைத்தவச் சிவநக ரடைவாரால்.

(இ - ள்.) பிரமன் விண்டு உருத்திரன் என்னும் முத்தேவரும் முழுமுதலாகிய ஓரிறைவனுடைய பேதங்களே என்றுணர்ந்து ஒன்பது நாள் வழிபாடு செலுத்தினோர் மிகாநின்ற இன்பநுகர்ச்சிகளைத் தாந்தாம் விரும்பியவற்றை விரும்பியபடியே வைகுந்தத்திலே சென்று நுகரா நிற்பர். பொருளானாதல் ஒழுக்கத்தானாதல் இழிந்தவர் தாமும், ஒப்பற்ற அன்புமட்டும் உளதாயின் அவ்வன்பால் வழிபட்டோர் இவ்வுலகத்தும் செல்வத்தே நிலைபெற்றுப் பின்னரும் சான்றோர்க்குரியதென முன்னர் யாங்கூறிய சிவபுரத்தேயும் சென்று இன்புறாநிற்பர்.