பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்503

போன்ற திருமேனியுடைய இறைவனை மேன்மேலும் வழிபாடு செய்வதன் வாயிலாய்ப். பேயுலக மெய்தியவரும் படிப்படியாக உயர்ந்த உலகங்களிலே சென்று சென்று இறுதியில் திருமால்போன்று முற்கூறப்பட்ட நில முதலிய அவ்வொன்பது தத்துவங்களானும் அறிவு விளக்கமுறாநின்ற தலைமைத் தன்மையுடையராகுவர்.

(வி - ம்.) புந்தி - புத்தி. தெருள்விக்கும் - விளக்கும். இகப்புறும் - குறையும். இழிந்தோர் - பைசாசவுலக மெய்தியவர். அடைவு - படி முறை. முதன்மை - தலைமைத்தன்மை.

(222)

 இலக்கம் வண்டரை யாகவிட் டெறிந்தக லிடைப்பிழை யாதற்றே
 நலக்க நம்பிராற் குஞற்றிய வினைகளு நன்மையிற் பிழையாதால்
 குலக்க ணந்தொழு மமலனும் வினைதொறுங் குருலகு வெனும்பேதத்
 துலக்க ரும்பயன் றருமினிப் பாதகத் துண்மையு முரைப்பாமால்.

(இ - ள்.) நிலமே இலக்காக விட்டெறியப்பட்ட கல் இடையிலே தவறாமல் அந்நிலத்தையே அடைவதுபோன்று நலமெய்தற் பொருட்டு நம் பெருமானாகிய சிவபிரானுக்குச் செய்த வழிபாடுகளும் தத்தம் பயனாகிய நலத்தைப் பிழைபடாமல் நல்குவனவாம். கூட்டமாகிய சிவகணம் தொழாநின்ற இறைவனும் தன்னை நோக்கிச் செய்த வழிபாடுகளின் பெருமை சிறுமைகட்கேற்ப உலத்தலில்லாத பயனை ஈந்தருளுவன். இனி தீவினைகளின் தன்மையையும் கூறுவேங் கேட்பாயாக.

(வி - ம்.) அற்று - அத்தன்மைத்து. வினை - வழிபாடு முதலியன. குரு - பெருமை. லகு - சிறுமை. உண்மை - இயல்பு.

(223)

வேறு

 முன்ன ருஞற்றும் பாதகரே முதிர்வா தனையான் மறுவலுந்தாம்
 துன்னி விளைப்பா ரவையெல்லாந் தூலஞ் சூக்க மதிசூக்கம்
 என்ன மூன்றாந் தூலமீங் கியம்பப் படுமா லதுமூன்றாம்
 உன்னு மனவாக் குக்காயத் தொன்று நான்கு வகைப்படுமால்.

(இ - ள்.) பிறப்புத்தொறும் தீவினையே செய்துவரும் தீவினையோரே காழ்ப்பேறிய பழக்கங் காரணமாக மீண்டும் மீண்டும் அந்நெறியிலேயே சென்று அத்தீவினையையே செய்பவராகின்றார். அத் தீவினைகள் அனைத்தும் பருமை யுடையனவும் நுண்மையுடையனவும் நனி நுண்மையுடையனவும் எனப் பண்பான் மூன்று வகைப்படும். அவற்றுள் பருமையுடையன இப்பொழுது கூறப்படும். அவைதாமும் மீண்டும் நினைக்கும் மனமும், பேசும் மொழியும், செய்யும் உடலும் எனக் கருவிவகையானும் மூன்று வகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் வினைவகையால் நான்கு வகைப்படும்.

(வி - ம்.) பாதகர் - தீவினைமாக்கள். வாதனை - பழக்கம். மறுவலும் - மீண்டும். தாம் : அசை. அது - அப்பருமையுடைய தீவினை. உன்னுமனம் என்றதனால் பேசும் வாக்குச் செய்யும் காயம் எனவும் விரித்தாம்.

(224)