பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்513

 ஈனமில் பிதிரர் செய்கடன் றவிர்த லிருவினை நரகொடு துறக்கம்
 ஊனமி லிறையு மில்லையென் றுரைத்த லுண்மது மகளிர்தோள் கலத்தல்.

(இ - ள்.) தேவவழிபாடும் தீயோம்பலும் மந்திரமோதலும் ஆகிய இவற்றைக் கற்பித்த சான்றோரைப் பாதுகாவாது புறக்கணித்தலும்; ஆன் பார்ப்பனர் அறவோர் இவர்கட்குக் கேடுசூழ்தலும்; அரசனைப் பழித்தலும், குற்றமற்ற பிதிரர் கடனைகளைத் தவிர்தலும், நல்வினை, தீவினை, நரகம் துறக்கம் குற்றமற்ற கடவுள் என்னும் இவை இல்லை என்று நாத்திகம் பேசுதலும், கள்ளுண்ணும் மகளிர் தோளைத் தழுவுதலும்.

(வி - ம்.) வானவரை வழிபடவும் எரியை ஓம்பவும் இவற்றிற்குரிய மந்திரத்தையும் கற்பித்த வரதர் என்க. மதுவுண்மகளிர் என மாறுக.

(244)

 பூரணை யிருது மதிபகல் பிதிரர்ப்
           போற்றுநா ளாதியின் மகளிர்
 வாரணி கொங்கை மணத்தனீர்க் கலத்தல்
           வண்பசுப் புணர்தனட் புடைத்தல்
 ஈரமில் கொடுஞ்சொற் கிளத்தனீர்க் கோட்டை
           யிறுத்தல்கூ பத்தந் தூர்த்தல்
 வீரமுற் றமர்தன் சமயங்கால் கோறல்
           விண்ணவர் விமானங்கள் சிதர்த்தல்.

(இ - ள்.) நிறை மதிநாளினும் மகளிர்பூப்புக் காலத்தும் பகற் பொழுதினும் பிதிர்க் கடனியற்று நாளினும் இன்னோரன்ன நூல் விலக்கிய காலத்தே மகளிரைப் புணர்தலும், தண்ணீருட் புணர்தலும் வளவிய ஆன்களைப் புணர்தலும், நட்பினைப் பிரித்தலும் இரக்கமற்ற கொடுஞ்சொற்களைப் பேசுதலும் நீர்நிலைகளின் கரைகளை உடைத்தலும், கிணற்றைக் குளத்தைத் தூர்த்தலும், தன் சமயத்தை அழித்தலும் தேவர் உறையும் மண்டபங்களை இடித்தலும்;

(வி - ம்.) பூரணைமதி எனமாறுக. இருது - மகளிர்பூப்பு. நீர்க்கோடு - நீர்நிலையின் கரை. விமானம் - மண்டபம்.

(245)

 அமிழ்தமே யாகப் பகாதுண லன்றி யனைத்துமா மருஞ்சுவை கொழிக்கும்
 தமிழ்முனி யுபபா தகமத னினமுஞ் சழக்கறக் கிளக்குதுந் தெரிக
 இமிழ்மறை யாளர் தாபதர் சகிகன் னியர்பசு விவர்வினைக் கூறும்
 நிமிர்தர விழைத்த னெஞ்சழுக் காற்றி னிறுவல்பா வையர்பழி நாட்டல்.

(இ - ள்.) தாமுண்பது பெறற்கரிய அமிழ்தமே யாயவிடத்தும் விருந்தினர்க்குப் பகுத்துக் கொடாமற் றமியராயுண்பதும், என்னும் இவைகளேயன்றி இவை போல்வனவும் தீவினைகளேயாம். பெறற்கரிய சுவை நிரம்பிய தமிழ் முனிவனே! இனி அத்தீவினைக்கு இனமாய வினைகளையும் குற்றமற மொழிவேம் அறிந்துகொள்க ! ஓதும் வேதத்தை