பக்கம் எண் :

516தணிகைப் புராணம்

 பேனநீர்க் கடலிற் கலங்கொடு சேறல்
           பெட்டுவே சையர்நலந் திளைத்தல்.

(இ - ள்.) ஊன்தின்றற்கு விரும்புதலும், கொலைத் தொழில் கண்டவிடத்தே இரக்க முறாமையும், அக்கொலைச் செயலை இடைநின்று விலக்காமையும், ஏனைய களவு பொய் முதலிய இழிதொழில்களைச் செய்ய அஞ்சாமையும்; கொன்று தின்னும்பொருட்டு ஆடு கோழி முதலியவற்றை வளர்த்தலும், நம்மாலான வழிபாடு இறைவன் பணியாகிய இவற்றை யாம் ஒருசிறிதும் செய்திலேமே என்று இரக்கங் கொள்ளாமையும், நுரைமிக்க நீரையுடைய கடலின்கண் மரக்கல மூர்ந்து செல்லுதலும், வேசைமகளிரை விரும்பி அவரின்பத்தை நுகர்தலும்,

(வி - ம்.) ஏனைய இழிவு - கள்ளல், வஞ்சித்தல் முதலியன. இறுத்திட - கொன்றுண்ண என்க. பேனம் - நுரை. கலம் - மரக்கலம்.

(251)

 வினைபுரி யாளர்க் குள்ளதீ யாமை
           வெய்யகோ னடத்தல்வெங் கோலின்
 முனைவர்பா லேற்றல் கள்ளனை யறிந்து
           நல்லனென் றேமொழிந் தகற்றல்
 இனைதரக் கள்ள னென்றுநல் லவனை
           யெண்ணல்கள் ளற்குடன் படுதல்
 புனைதரு கள்ளத் தொழில்சொலல் பயிற்றல்
           புரையறக் கள்ளனைச் சார்தல்.

(இ - ள்.) தொழிலாளர்க்குரிய கூலி கொடாமையும், கொடுங்கோல் நடத்தலும் கொடுங்கோல் காரணமாகத் துறவியரிடத்தே அரசன் இரந்து பொருள் கோடலும் கள்ளனை அறிந்திருந்தும் நல்லவன் என்றுகூறி விட்டுவிடுதலும் நல்லவனை வருந்தும்படி கள்ளன் என்றே நினைத்தலும், களவு செய்தற்கு உடன்பட்டிருத்தலும் பொய் பேசுதற்குரிய களவுத்தொழிலைச் செய்தற்கு வழிகூறுதலும் அத்தொழிலைக் கற்பித்தலும் உயர்ச்சி கெடும்படி கள்ளனைச் சேர்ந்திருத்தலும்,

(வி - ம்.) வினைபுரியாளர் - தொழிலாளர். உள்ளது - கூலி. வெய்யகோல் - என்றது அரசன் செங்கோன் முறை பிறழ்ந்து கொடியனாய்த் தீமை செய்தலை. இனைதல் - வருந்துதல். கொடாவிடின் நும்மை வருத்துவல் என்று குறிப்பானுணர்த்திச் சொல்லான் மட்டும் இரப்பார் போன்று பொருள் வௌவலை வெங்கோலின் ஏற்றல் என்றார். "வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு" எனவரும் திருக்குறளையும் நினைக.

(252)

 பாறயி ரிழுது தயிலநீர் கூலம் பட்டுவார் கவரிதண் கவிகை
 நாறுமூன் றசைசங் கிதைவிரி மதலை நகைமணி யிரும்புசெம் பாதி
 வீறிலி திரண மாயினும் பிறர்பால் வெறுத்தன கரவினாற் கோடல்
 தேறுக வுபபா தகக்கின மென்று தெள்ளிய வொள்ளறி வுடையோய்.