பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்521

 உடற்றுபு நாசி யண்ண மோட்டம்வார் குய்யங் கோத்துப்
 பிடித்தனர் பாச மீர்ப்பப் பெயர்குவர் சிற்சி லோரே.

(இ - ள்.) சிலர் கூற்றன் ஏவலராற் கவுளைத்துளைத்துக் கோக்கப்பட்ட கொடிய சங்கிலிப் பிணிப்பிலகப்பட்டுச் செல்லாநிற்பர். வேறு சிலர் கழுத்தை யிறுக்கிக் கட்டப்பட்ட வீசுதற்குரிய கயிற்றோடு செல்லாநிற்பர். வேறுசிலர் அத்தூதராலே துன்புறுத்தப்பட்டு மூக்கு மேல்வாய் நெடிய உதடு குய்யம் முதலிய உறுப்புக்களிலே கோத்துப் பிடித்து கயிற்றாலே வலிந்திழுக்கப்பட்டுச் செல்லுவர்.

(வி - ம்.) கொடிறு - கவுள். தொடர் - சங்கிலி. மிடறு - கழுத்து. உடற்றுபு - உடற்றி, துன்புறுத்தி. ஓட்டம் - உதடு. வார் ஓட்டம் எனமாறுக. பிடித்தனர் - முற்றெச்சம்.

(265)

 கடகரி யொறுப்ப வேங்கை கதழ்ந்துதாய்த் துமிப்பச் சீயம்
 அடல்சினங் கடஎ யாளி யதிர்த்துவாய்ச் சுவைத்துக் கால
 இடிபடை மழைதீ மாரி யெறுழ்ச்சிலை மாரி யாதி
 உடறுணி படுப்ப மாழாந் துறுவதி கடப்பர் சில்லோர்.

(இ - ள்.) வேறுசிலர், செல்லுங் கொடுநெறிக்கண் உள்ள மதயானை தாக்கவும், புலிகள் விரைந்து பாய்ந்து துன்புறுத்தவும், அரிமான் கொல்சினஞ் செலுத்தப் பாய்ந்து தாக்கவும், யாளி முழங்கித் தம்மை வாயிற் பற்றி மென்று கக்காநிற்பவும், இடியேறும் கொல்படையும், மழையும் நெருப்பு மழையும் வலியகன் மழையும் முதலியன உடலைத் துணியாநிற்பவும் மயங்கி அவ்வழியைக் கடந்து செல்லா
நிற்பர்.

(வி - ம்.) கடம் - மதம். கதழ்ந்து - விரைந்து. எறுழ் - வன்மை. சிலைமாரி - கன்மழை. வதி - வழி.

(266)

 அயினுதிப் பரல்கா றின்ன வழற்கொழுந் தளாவிச் சூறை
 வெயின்முகத் துருகும் யாக்கை மென்றுமென் றுமிழ்ந்து சூழ
 உயிரினை முழுதுந் தூத ரொறுத்திடுஞ் செல்லன் மாந்தப்
 பயிலிட மின்றி நீண்ட பாழ்நெறி யிறப்பர் சில்லோர்.

(இ - ள்.) வேலின் நுனிபோன்று கூர்த்த பரற்கற்கள் காலைப் பெரிதும் உறுத்தாநிற்ப, தீக்கொழுந்தினால் அளாவப்பட்டும் சூறைக் காற்றான் மோதுண்டும், கொடிய வெயிலால் உருகாநிற்கும் தமது உடலை யமதூதர் வேறு மென்று மென்று உமிழ்ந்தும் தம்மைச் சூழ்ந்து வாராநிற்பவும் இவ்வாறாக அத்தூதரால் தம்முயிரை ஒறுத்திடப்படும் துன்பத்தை நுகர்ந்து மேலும் இவற்றிற்குத் தப்பி ஒதுங்குமிடங்களும் இன்றி நெடிய அப்பாழ் நெறியைக் கடவாநிற்பர்.

(வி - ம்.) அயில் - வேல். சூறை - சுழற்காற்று. செல்லல் - துன்பம். பயிலிடமும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தாற் றொக்கது.

(267)