பக்கம் எண் :

522தணிகைப் புராணம்

 நெறிகளோ கொடிய வந்த நெறிபயில் பொருள்க ளெல்லாம்
 தெறுவன வவற்றின் மேலுஞ் சிக்கயாப் புறுத்த காலர்
 குறிபயி லங்க நான்குங் கொடியன வென்றா லென்னே
 உறுதுயர்க் கவதி யுண்டோ தென்திசை யுறுநர்க் கம்மா.

(இ - ள்.) செல்லும் வழிகளோ சாலவும் தீயன. அந்த வழிகளிலே வழங்கும் அரிமான் முதலிய பொருள்களும் கொல்வன. அவற்றின் மேலும் தம்மை அகப்படக் கட்டிக்கொடுபோகும் காலதூதருடைய நால்வகைப் படைகளும் மிகமிகக் கொடுமை செய்வன. இங்ஙனமாயின் அவர்நிலை என்னாம்? தென்றிசை எய்தும் அவர்படும் துயரத்திற்கு எல்லைதான் உளதாமோ!

          (வி - ம்.) பொருள், கடகரி - அரிமான் முதலாக முற்கூறப்பட்டன. அங்கம் நான்கும் - படை நான்கும். என்னே என்றது இரக்கக் குறிப்பு. அம்மா - அசை.

(268)

 பஃறுயர்ப் படுத்தி யுய்த்துப் படர்பெருங் கால தூதர்
 அஃறவழ் மெய்யர் வெய்ய வடன்முனைப் படைய ராகி
 விஃறவழ் கழற்கால் வீரர் மிடைந்தனர் சூழ வைகும்
 கஃறலை வணங்குந் திண்டோட் காவலற் கிதனைச் சொல்வார்.

(இ - ள்.) இவ்வாறு பல்லாற்றானும் பற்பல துன்பங்களை நுகர்வித்துச் செலுத்தி வருகின்ற அக்காலன் பணியாளர், இருள் தவழுமாறு போலக் கறுத்த உடலுடையோரும் கொடிய கொல்லுங் கூர்நுனிப் படைக்கலன்களை யுடையரும் ஆகிய வில் தவழும் தோளையும் வீரக் கழல் கட்டிய காலையும் உடைய மறவர் பலர் நெருங்கித் தன்னைச் சூழா நிற்ப வீற்றிருக்கும் தம் அரசனாகிய, மலையை ஒத்த திரண்ட தோளையுடைய கூற்றுவனுக்கு (ப் பின்வரும்) இம்மொழிகளைக் கூறாநிற்பர்.

          (வி - ம்.) பஃறுயர் முதலிய நான்கன்கண்ணும் குறிலின் பின்னின்ற லகரவீறு தகர முதன்மொழி வந்தமையால் ஆய்தமாகத் திரிந்து முடிந்த புணர்ச்சி விகாரம். காலதூதர் காவலற்குச் சொல்வார் என இயைக்க.

(269)

 இறைவநின் வியங்கோ ளாற்றி னிழுதையர் தம்மை யெல்லாம்
 முறையுளி யியவைத் தண்ட முற்றுவித் தீங்குத் தந்தாம்
 மிறைவளர் தண்டமின்னும் விளைப்பன வருண்மோ வென்ன
 நிறைகுணத் தரும வேந்த னிகழ்த்திய மாற்றங் கேட்டு.

(இ - ள்.) எம்பெருமானே! நின்னுடைய ஏவல் வழிச்சென்று தீயோரை எல்லாம் பற்றி முறைப்படியே செய்யவேண்டிய வழித்துயர் பலவும் நுகர்வித்து நின் றிருமுன்னர்க் கொணர்ந்துள்ளேம். துயரம் வளர்தற்குக் காரணமான தண்டனைகள் இத்தீயோர்க்கு யாம் செய்யக் கடவவற்றைத் திருவாய்மலர்ந்தருள்க என்றுகூற நிறைந்த பண்புடைய அவ்வறக் கடவுளாகிய கூற்றுவன் அத்தூதர் மொழியைக் கேட்டுக் கொண்டு,