பக்கம் எண் :

528தணிகைப் புராணம்

நெருங்கிய துன்பமின்றி இன்பமோ சிறிதும் நிலைபெறுவதன்றே; இங்ஙன மாதலின் அத்தீவினையின் இயல்பினை யாரே இயம்ப வல்லார்.

(வி - ம்.) என்பவேனும் அதனால் விளையும் தீவினையால் என வருவித்து முடிக்க. அள்ளல் - நரகம். நிலைவது - நிலைபெறுவது.

(285)

வேறு

 எழுநான்கு கோடி யளறும்வி ழுங்க வெறிவெண்ட ரங்க விரிநீர்
 முழுவான்ப தங்க ளெவையுஞ்ச வட்டு முடிவுங்க வற்சி யுறுவார்
 கழியாத நோன்மை யதிபா தகங்கள் கருதாது ஞற்றி னர்களும்
 வழியாய வற்றி னினமான பாவ மதியாமை யாற்றி னருமே.

(இ - ள்.) எளிதில் கழிதலில்லாத வன்மையையுடைய மிகைத் தீவினைகளைச் சிந்தியாமற் செய்தவர்களும், அவற்றிற்கு வழியாய் இனமுமான தீவினைகளையும் ஆராயாமற் செய்தவரும் இவ்வாறு இருபத்தெட்டுக் கோடி நரகங்களும் தம்மை விழுங்காநிற்ப, எறியாநின்ற வெள்ளிய அலைகளையுடைய விரிந்த கடல் வானவர் நாடுகள் அனைத்தையும் விழுங்கும் பிரமப் பிரளயங்காறும் அவற்றிலழுந்தி வருந்தாநிற்பர்.

(வி - ம்.) கடல் வானுலகமனைத்தையும் அழிக்கும் பிரமப் பிரளயம் காறும் இருபத்தெட்டுக் கோடி நரகத்திலும் கிடந்து வருந்துவர் என்பதாம்.

(286)

 இருவான் சுடர்க்கு முடிவெய்து காறு மெழுநான்கு கோடி நரகும்
 ஒருவாது ழப்பர் கொலையாதி யைந்து முணர்வற்றி ழைத்த கொடியோர்
 மருவாரி சத்த னொருமுன்ப கற்குள் வருபாதி கால மவைசேர்
 பரிபாத கங்கள் புரிவோர்தி ளைப்பர் பதினான்கு கோடி யளறு.

(இ - ள்.) கொலை முதலிய பெருந்தீவினைகள் ஐந்தனையும் உணர்ச்சியில்லாமையானே இயற்றிய தீயோர் அவ்விருபத்தெட்டுக் கோடி நரகினும் அகலாது கிடந்து, ஞாயிறுந்திங்களும் அழியுங்காலம் வரையில் வருந்தாநிற்பர். இனி, வருந்துதற்கிடமான தீவினைகளைச் செய்வோர் பிரமனுடைய முன்பகற் பொழுதின் பாதிக்காலமாகிய ஐந்நூறு சதுர்யுகங்காறும் பதினான்குகோடி நரகங்களிலே கிடந்து வருந்துவர்.

(வி - ம்.) பெருந்தீவினை செய்தோர் ஞாயிறுந்திங்களும் கெடுந்துணையும் இருபத்தெட்டுக் கோடி நரகினும் கிடந்துழல்வர். தீவினை செய்தோர் ஐந்நூறு சதுர்யுகங்கள் பதினான்குகோடி நரகத்திலே கிடந்துழல்வர் என்க. வாரிசத்தன் - பிரமன். பரிபாதகங்கள் - வினைத்தொகை.

(287)

 அயனார்ப கற்க ணொருபாத வந்த மளறேழு கோடி யுறுவர்
 பயமேது மின்றி யுபபாத கங்கள் பரிவுற்றி ழைத்த பதகர்
 வயமாரி வற்றின் வருகால மள்ள லொருபாதி யாக மருவச்
 சயமாரி வற்றின் வழிபாத கங்க ளுடையார்ச ழங்க லுறுவார்.