பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்529

(இ - ள்.) அச்சமின்றி இனத்தீவினைகளை ஆதரவோடு இயற்றிய தீயோர் பிரமனுடைய பகற்பொழுதின் ஒருகூறாகிய இருநூற்றைம்பது சதுர்யுகம் முடியுங்காறும் ஏழுகோடி நரகங்களினும் கிடந்துழலுவர். வெற்றியுடைய இத்தீவினைகட்கினமான தீவினைகளைச் செய்தோரும் அத்துணைக்காலம் மூன்றரைக்கோடி நரகங்களிலே கிடந்து வருந்துவர்.

(வி - ம்.) பாதவந்தம் - பாதி முடியுங்காறும். வயம் - வலி. சயமாவது தன்னைச் செய்தோரைத் துன்புறுத்துவதிலே உண்டாகும் வெற்றி என்க. சழங்கல் - வருந்தல்.

(288)

 எரிவாயு றுத்த வொளிரும்ப சும்பொ னெனவள்ள லின்ன லுறலும்
 உரைபாத கங்க ளொழிவுற்றி யாரு முறுதூய்மை யெய்தி விரைவில்
 கரையேறு வார்க ணிரயந்த காத கரிசான வெஞ்சு வினையும்
 தரைமீதி ழிந்த பிறவிக்கண் வந்து நெடிதிற்ற ணத்த லுறுவார்.

(இ - ள்.) இவ்வாறு நரகங்களிலே கிடந்து வருந்திமுடிந்த அளவிலே தீவினையாளர்கள் தீயிடைப்பெய்த ஒளிவிடுகின்ற பசிய பொன்மாசுநீங்கினாற் போன்று தந்தீவினை யகலப்பெற்று மிக்க தூய்மை எய்தி விரைந்து அந்நரகங்களினின்றும் விடுதலை பெறுவர். சிறுமையாலே நரகத்திலே கிடந்து நுகர்தற் குரியவல்லாதனவாய் எஞ்சிய தீவினைப் பயன்களையும் இந்நிலவுலகத்திலே ஓரறிவுயிர் முதலிய கீழான பிறப்புக்களிலே தோன்றி நெடிய கால எல்லையிலே நுகர்ந்து தீர்ப்பர்.

(வி - ம்.) எரி - தீ, நரகத்திற்குவமை. பொன் - உயிர்க்குவமை. அள்ளலின்னல் - நரகதுன்பம். நிரயத்திற் கிடக்குமளவு கொடுமையின்மையான் எஞ்சிய தீவினை என்க. நெடிது - காலத்தின்மேற்று.

(289)

 தருவாகி யென்பில் புழுவாய்ப்ப றப்பை தானாய்வி லங்கி னுருவாய்
 ஒருவாத செல்ல லுடறோற ருந்தி யுறுவார்க ளாவி னுருவம்
 வெருளான்பி றப்பு விழமுற்ற வத்தின் வியன்மா னிடத்தி லணைவார்
 அரிதாமி தன்க ணணைவுற்று முய்தி யறியாரி தென்கொ லறிவே.

(இ - ள்.) அங்ஙனம் கீழ்ப்பிறப்பின் வருங்கால் மரமாகியும் எலும்பில்லாப் புழுவாகியும் பறவையாகியும் விலங்குகளாகியும் பிறப்புற்று அகலாத துன்பங்களையே தாமெடுக்கும் ஒவ்வோருடற்கண்ணும் நுகர்ந்து இறுதியாக ஆன் பிறப்பினை எய்துவர். வெருட்சியுடைய அவ்வான்பிறப்பு முடிந்த வளவிலே முன்செய் தவப்பயனாகப் பெரிய மானிடப் பிறப்பிலே எய்தியும் தாம் உய்ந்துபோதற்குரிய நெறியினை அறியமாட்டாராயிருந்தனர். இவரறிவுதான் எத்தன்மைத்
தோயாமறிகிலேம்.

(வி - ம்.) பறப்பை - பறவை. செல்லல் - துன்பம். வெருளான் - வினைத்தொகை. உய்தி - உய்யும்நெறி. கொல் - அசை.

(290)

 அரிதாம்பி றப்பு ளுயர்மானி டத்தி னடைவுற்று வைக லதனின்
 அரிதாகு நல்ல குலனிற்பி றத்த லறவாள ராத லதனில்