| | அரிதாகும் வேத முதலாய்ந்து முக்க ணமலற்க லத்த லதனின் | | | அரிதாமு யர்ந்த குலனுற்றும் வீணி லழிவாரி தென்கொ லறிவே. |
(இ - ள்.) இவ்வாற்றான், பிறப்பினுள் வைத்து உயர்ந்த மக்கட் பிறப்பை எய்தி நிறைந்த அகவையுடையராய் இருத்தல் மிக அரிதேயாகும். மக்களுள்ளும் நல்ல குலத்திற் பிறத்தல் பின்னுமரிதே யாகும். நற்குலத்துப் பிறந்தாலும் அறவோராக இருத்தல் மிகவும் அரிதாகும். அறவோராயவிடத்தும் வேதாகமங்களை ஓதி ஆராய்ந்துணர்ந்து முக்கட் கடவுளை வழிபட்டு அவன் திருவடிநீழலிலே கலத்தல் மிகமிக அரிய செயலாகும். அதற்கேற்ற சிறந்த குலத்திலே பிறந்திருந்தும் வீணாக மாந்தர் இறந்துபடுகின்றனர். என்னே! இவர்தம் அறிவிருந்தவாறு! (வி - ம்.) வைகல் என்றது நிறைந்த ஆயுளுடையராயிருத்தல் என்றவாறு. அறவாளர் - எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகு மியல்புடையோர். அந்நெறிப் படராமல் என்பார் வீணில் அழிவார் என்றார். (291) | | நிலையாமை கண்டு நிலையாத காய நிதியாதி கொண்டு சிலர்தாம் | | | உலையாத வூக்க முலகத்தி லீட்ட வுதுகண்டி ருந்து முகிழ்மென் | | | முலைமாத ராதி பொருண்மீது வேத முறையிற்பி றழ்ந்து படரும் | | | அலையான வார்வ மறவீசி யுய்தி யறியாரி தென்கொ லறிவே. |
(இ - ள்.) "பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லாவுலகம்" என்னும் மெய்ம்மையை ஐயந்திரிபற வுணர்ந்து ஒருசிலரே ஊழானே தமக்கெய்திய உடல் பொருள் முதலியவற்றைக் கொண்டு கெடாத மெய்ப்பொருளாகிய திருவருளை இவ்வுலகத்திலே தேடாநிற்பப் பற்பலர், அதனைக் கண்டிருந்தும், அரும்பனைய மென்முலை மடவார் முதலிய பொய்ப்பொருண்கண் மேல் வேதநெறியினின்றும் மாறுபட்டுச் செல்லாநின்ற அலைபோன்ற தம் அவாவினைத் துவரக் கெடுத்து உய்ந்து போதலை நினைகின்றிலர். என்னே இவர்தம் அறிவிருந்தவாறு. (வி - ம்.) நிலையாமை காட்சியளவைக்கே நன்கு புலப்படுவதாயிருந்தும் என்பார் 'கண்டு' என்றார். ஊக்கத்தாற் றிருவருளை ஈட்ட என்க. முகிழ்முலை - வினைத்தொகையுமாம். ஒன்றன்பின் னொன்றாக வருதலின் அலையான ஆர்வம் என்றார். (292) | | முத்தேவ ராதி புலவோரும் விண்ணின் முழுதின்ப கற்றி யருளின் | | | பித்தேறி நின்ற முனைவன்ப தங்கள் பெருகன்பி னோடு பணியும் | | | அத்தேய மான வுயர்பார தத்தி னரிதின்றி வாழ்வ ணவியும் | | | செத்தாரின் வேறு மலராகி யுய்தி தெளியாரி தென்கொ லறிவே. |
(இ - ள்.) பிரமனும் திருமாலும் உருத்திரனும் ஆகிய முத்தேவரை யுள்ளிட்ட தேவர்களும் தமக்கெய்திய வானுலகுதரும் பேரின்பத்தை வெறுத்து உயிர்கட்கருளுஞ் செயலிலே பித்தேறிநின்ற முழுமுதலின் திருவடிகளைப் பெருகிய அன்போடு பணிதற்கிடமான அத்தகைய மாண்புடைய இப்பாரத நாட்டின்கண் முற்செய்தவமுண்மையால் எளிமையாகவே மக்கள் வாழ்வு தம்மை எய்தியிருப்பவும் அந்தோ மாந்தர்பலர் |