பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்53

(இ - ள்.) இராக்காலமெல்லாம் (விண்டுவாகிய) நாயகனோடுளதாகிய புணர்ச்சியில் மூழ்கிய பெரிய பூதேவியாகிய பெண், அக்கூட்டத்தினால் செந்நிறம் விரவப்பெற்ற விழிகளையும் சிறந்த பற்குறியையுடைய கொவ்வைக்கனி போன்ற அதரத்தோடுகூடிய வாயையும் (நாயகரல்லாத) ஏனையோர் விழிகளுக்குப் புலப்படுத்தற்கு உள்ள நாணமுற்றுக் காலமாகிய கையால் மூடியதை யொப்பச் செய்களில் மேலாகிய மலர்ந்த செங்கழுநீர் மலரும் அல்லி மலரும் முற்பகலில் கூம்புவனவாகும்.

(வி - ம்.) கணவன் - விண்டுவாகிய நாயகன்; சந்திரனென்பாருமுளர்; தந்தக்குறி - பற்குறி; பரர் - நாயகரல்லாத ஏனையோர்; மங்கையர் நாயகனோடு இரவின் நடந்த கலவிக் குறியை ஏனையோர் பகலில் காண்டல் முறையன்மையால் அதற்கு நாணிமறைப்பது வழக்காறாகலின், முன் பகற்காலமாகிய கையான் மூடியென்றார்; பாணி -காலம், கை. மலர்முகங்குவிதல் - கூம்பல். இனி மலர்போன்ற முகங்குவிதல் - கூம்பல்; இனி மலர்போன்ற முகஞ்சாம்பலெனக் கொள்ளினு மிழுக்காது. முன்பகல் - முன்னாள், பின்பகலாகிய மாலைக்காலத்து இவை மலர்வனவாகலின் குவிதற்கு முன்பகலைக் கூறினார்.

(87)

 மேகமண் டலத்தைத் தைவரு வாழை
           விரவுவ தொருபுற மாகப்
 பூகமென் றயிர்ப்ப நிவந்தெழு கரும்பு
           பொதுளுவ தொருபுற மாக
 நாகவல் லிகளு மஞ்சளிஞ் சிகளும்
           நலப்பன வொருபுற மாகக்
 காய்கதிர்ச் செந்நெ லிடமெலாம் விளைக்கும்
           களமர்கள் கம்பலை மிகுமால்.

(இ - ள்.) ஒரு பக்கத்து மேகமண்டலத்தைத் தடவுகின்ற வாழை மரங்கள் கலந்திருக்கும்; இஃதல்லாமல் ஒரு பக்கத்துக் (கண்டோர்) கமுகமென் றையங்கொள்ள உயர்ந்தெழுகின்ற கரும்பு நெருங்கியிருக்கும்; இஃதன்றி யொருபக்கத்து வெற்றிலைக் கொடிகளும் மஞ்சளுமிஞ்சியும் நன்மையாயிருப்பனவாகும்; முற்றிய கதிரோடு கூடிய செந்நெற் பயிர்களை எல்லாவிடங்களிலும் விளைவிக்கின்ற உழவர்கள் ஆரவாரமிகும்.

(வி - ம்.) ஆகவென்ற மூன்று சொல்லும் அசைநிலை; இனி, களியானாக கதத்தானாக வென்றாற்போல விகற்பப்பொருளாகக் கொள்வாரு முளர்; நாகவல்லி - வெற்றிலைக் கொடி; நலப்பன - நன்மையாகவிருப்பன; இச்செய்யுளான் நன்செய் புன்செய் வளங்கள் வேறு வேறாக உள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.

(88)

 பள்ளிகொண் டுறங்கும் புள்ளினம் தீய
           பண்பினர் போலெழுந் திரியக்
 கள்ளயி னசையின் வண்டினந் தக்கோர்
           கடுப்பவீழ் மலரொடுந் துவள