பக்கம் எண் :

54தணிகைப் புராணம்

 வள்ளலப் படைகள் பூட்டுபு களமர்
           மலர்முத றுமிதரக் கடவும்
 வெள்ளமெண் ணிலவென் றுரைதரு பகட்டேர்
           விளாவுவ வியனில நெளிய.

(இ - ள்.) (மலர்களைத்) துயிலுமிடமாகக் கொண்டு தூங்குகின்ற பறவைக்கூட்டங்கள் (நட்டார்க்கிடையூறு வந்தகாலை விட்டு நீங்குந்) தீய குணமுடையவர்களைப்போல (மலரைவிட்டு எழுந்தோடவும்,) தேனையுண்ணும் விருப்பினையுடைய வண்டினங்கள் (நட்டார்க்கிடை யூறுற்றகாலைத் தாமுமுடனனுபவிக்கு மேன்மக்களைப்போல) வீழ்கின்ற மலர்களோடு புரளவும், படையுழவர்கள் கலப்பைகளிற் பூட்டி மலரின் வேர் பிளக்கும்படி செலுத்தும் வெள்ளமென்னு மளவு கணக்கில வாகுமென்று உரைக்கத் தகுந்த கடாக்கள் பூட்டிய ஏர்கள் பெரிய நிலனெளியும்வண்ணம் உழுவனவாம்.

(வி - ம்.) பள்ளி - துயிலுமிடம்; அயிறல் - உண்ணல்; வள் - கூர்மை; பூட்டுபு - பூட்டி; மலர்முதல் - தூர்; துமிதர - கெட; வெள்ளம் - ஒருவகையெண்; உரைத்தகு - உரைக்கத் தகுந்த; விளாவுதல் - சுற்றுதல்; "அற்றகுளத்தி னறுநீர்ப்பறவைபோல்" என்னுஞ் செய்யுளின் கருத்தமைந்திருத்தலைக் காண்க; ஏர்கள் விளாவுவனவென்க.

(89)

 உழுநர்க ளொருபா லுழுதசே றழுந்த
           வொண்புனல் பாய்த்துந ரொருபால்
 அழுகுசே றறிந்து மறுவலும் விளாவி
           யைதுறக் குழப்பிநே ராக்கி
 விழுமிய முளைக டெய்வதம் போற்றி
           மேதக வித்துந ரொருபால்
 செழுமுளை சேற்றிற் பதிந்தபின் றெளிநீர்
           கீழ்மடைக் கவிழ்க்குந ரொருபால்.

(இ - ள்.) (அம்மருதத்தில்) உழவுத் தொழில் செய்வோ ரொரு பக்கத்திலும், அங்ஙனமுழுதசேறு மூழ்கும்வண்ணம் ஒள்ளிய நீரைப் பாய்ச்சுகின்றவர்கள் ஒரு பக்கலிலும், சேறுபக்குவப்படுந் தன்மையறிந்து மீண்டுமுழுது அழகாகக் குழைத்து (பரம்படித்தலால்) சேமப் படுத்திச் சிறந்த நென்முளைகளை (அந்நிலத்தலைவனாகிய) இந்திரனைத் துதித்து மேன்மை பொருந்த விதைக்கின்றவர்கள் ஒரு பக்கத்திலும், நிறம் பொருந்திய முளைகள் சேற்றினிடத்துப் பதிந்த பின்னர்த் தெளிந்த நீரைக் கீழ்மடையின் வழியாகக் கவிழ்க்கின்றவர்கள் ஒரு பக்கத்திலுமாகப் பொருந்தியுள்ளார்கள்.

(வி - ம்.) அழுகு சேறு - பதப்பட்ட சேறு; மறுவலும் - மறுபடியும்; விளாவி - உழுது; ஐது - அழகு, நேராக்கல் - பரம்படித்துச் சமப்படுத்தல்; கெழு - நிறம்; 'குருவுங் கெழுவு நிறனு மாகும்' என்னும் (தொல், உரி.) சூத்திரத்தா னறிக. கீழ்மடை - முளைநீர் கவிழ்க்கு மடை.

(90)