பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்541

 உலாவுறு காலி லாத முடவனே யுரங்கொண் மந்தன்
 சலோதர நோய்க்கோட் பட்டான் றண்புனற் கரையன் மாதோ.

(இ - ள்.) இந்திரன் (வலது) தோளிலே வாதநோயுடையன். வளவிய திங்கட்டேவன் குட்டநோயுடையான். சுழல்தற்குக் காரணமான வெப்புநோயானே தக்கன் பிணிக்கப்பட்டான். வலியையுடைய சனிக்கடவுளும் உலாவுதற்குரிய கால்களில்லாத முடவன். தண்ணிய கடற் கரசனாகிய வருணன் நீர்க்கோவை நோயுடையான்.

(வி - ம்.) வலாரி - இந்திரன். கயம் - க்ஷயம். மந்தன் - சனி. சலோதரம் - நீரிழிவுமாம். மாது, ஓ : அசைகள்.

(315)

 துளவினன் றலைநோ யாளன் சுடரவன் பழுதார் மெய்யன்
 வளமுடி யிழந்தான் போதன் வாணிதன் னாசி தோற்றாள்
 அளமர மாரன் வெந்தா னடல்வலிக் காலன் பட்டான்
 உளரவிக் களத்தில் யாருந் தக்கனோ டுறுப்புத் தீர்ந்தார்.

(இ - ள்.) திருமால் தலைநோயுடையன், ஞாயிற்றுத்தேவன் பழுதுபட்ட தோலையுடையன் ஆயினன். பிரமதேவன் வளவிய தலையொன்றனை இழந்தனன். கலைமகள் மூக்கரியுண்டாள்; உளஞ்சுழலும் படி காமன் உடல்வெந்து போயினன். கொல்லும் வலிமிக்க கூற்று வன்றானும் கொல்லப்பட்டான். தக்கனுடைய வேள்விக்களத்திலே உளரான அமரரெல்லாம் அத்தக்கனோடு உறுப்புக்களை இழந்தனர்.

(வி - ம்.) துளவினன் - திருமால். போதன் - பிரமன். அளமரல் - அலமரல்; சுழலல் அவிக்களத்தில் உளர் யாரும் எனமாறுக.

(316)

 காண்டகு விண்டு கண்டங் கண்டமுற் றவனி வீழ்ந்தான்
 மாண்டமுப் புரமோ ரம்பின் மாய்ந்தன காளி சீற
 நீண்டதா ருகன்மெய் விட்டா னிகரிலாச் சூர னென்போன்
 தூண்டிய நமது வேலாற் றோல்வியி னுடல நீத்தான்.

(இ - ள்.) காண்டற் கினிய தகுதியையுடைய திருமாலும் கழுத்துத் துணிபட்டு நிலத்திலே வீழ்ந்தான். முப்புரங்களிலே வாழ்ந்த அசுரர் அனைவரும் ஒரே கணையில் மாண்டனர். இறைவி சினத்தலானே நெடிய தாருகன் இறந்துபட்டான். ஒப்பற்ற சூரபதுமனும் யாம் எறிந்த எமது வேற்படையானே தோற்று உடல் நீத்தனன்.

(வி - ம்.) விண்டு - திருமால். முப்புரம் - ஆகுபெயர். சூரன் - சூரபதுமன். யாம் தூண்டிய எமது வேலால் என்க.

(317)

 மலரவன் றன்னை மாயோன் வழங்கிடப் பட்டுத் தாழ்வன்
 அலரவன் மாயன் றன்னை யளித்திட வவனிற் றாழ்வன்
 புலவர்க டாக்கப் பட்டுப் போர்த்திற லவுணர் தாழ்வர்
 கலதிவா ளவுணர் தாக்கக் கடவுளர் தாமுந் தாழ்வர்.