| (இ - ள்.) பிரமதேவனைத் திருமால் ஈனுதலானே அத்திருமாலிற் றாழ்ந்தவனாவன். அப்பிரமதேவனே அத்திருமாலை உலகிலே பத்துப் பிறப்புக்களிலே படைக்குமாற்றானே அப்பிரமனிற்றாழ்ந்தவ னாவான். தேவர்களால் தாக்கப்பட்டு ஒருகாலத்தே போராற்றன்மிக்க அசுரர் தாழ்வர். மற்றொரு காலத்தே கலகஞ் செய்யுமியல்புடைய அவ்வசுரரானே தாக்கப்பட்டுத் தேவரும் தாழ்வர். (வி - ம்.) உயிர்கட்கு உயர்வும் தாழ்வும் மாறிமாறி வரும் என்றவாறு. (318) | | ஒருவன்பால் வெற்றி கொண்டோ னொருவன்பாற் றோல்வி கொள்ளும் | | | ஒருவன்பாற் சீர்த்தி கொண்டோ னொருவன்பா லிளிவந் துட்கும் | | | ஒருவன்பா னட்புக் கொண்டோ னொருவன்பாற் பகைமை கொள்ளும் | | | ஒருவனே நட்பா வுள்ளோன் பகையுமா யுடற்று மன்றே. |
(இ - ள்.) ஒருவனிடத்தே வெற்றி கொண்டவன் மற்றொருவனிடத்தே தோல்வியடைவன். ஒருவனால் மிகவும் புகழப்பட்டவன் மற்றொருவனால் இகழப்பட்டு நாணாநிற்பன். ஒருவன்பால் நட்புக் கொண்டவனே மற்றொருவன்பாற் பகைகொள்வன். ஒருவனுக்கு முன்னர் நண்பனாயிருந்தவனே மீண்டும் பகைவனாகித் துன்புறுத்தலும் உண்டு. (வி - ம்.) எனவே வெற்றி தோல்வி முதலியனவும் நிலையுதலுடையன வல்ல. மாறி மாறி வந்து இன்பமும் துன்பமும் செய்வனவே யாம் என்றவாறு. (319) | | வினையிலி விழியிற் றோற்றி விளங்கிய வெம்பின் வந்த | | | முனைகெழு வீர ரண்ட முழுவதும் பொடிக்கு மாற்றல் | | | வனைகழற் கணமுஞ் சூரன் வன்சமர்ப் பட்ட செல்லல் | | | தனைநிக ரில்லை யென்றாற் பிறர்துயர் சாற்று மாறென். |
(இ - ள்.) இறைவனுடைய திருவிழியிற் பிறந்து விளங்காநின்ற எமது பின்னர்த் தோன்றிய போர்முனையிற் பொருந்திய வீரர்களும் அண்டங்கள் அனைத்தையும் நுறுக்கும் பேராற்றல் படைத்த வீரக்கழற் கட்டிய நமது படைஞரும் சூரபதுமனுடைய வலிய போரின்கண் பட்ட துன்பத்திற்கு ஒப்பேயில்லை எனில் இனி இவ்வுலகத்தே ஏனையுயிர்கள் படுந்துன்பத்தை எவ்வாறு அளவிட்டுக் கூறவியலும். (வி - ம்.) வீரர் - வீரவாகு முதலியோர். கணம் - படைஞர். செல்லல் - துன்பம். (320) | | எற்றைக்கு முறவா யுள்ள திருண்மல மணுகாச் சோதி | | | எற்றைக்கும் பகையா யுள்ள திருண்மல மதன்றன் சார்பால் | | | எற்றைக்கும் வினைக ளீட்டி யிருப்பது காய மென்றால் | | | எற்றைக்கு மெச்சீர் வாய்ந்த காயமும் பகைமை யன்றோ. |
|