பக்கம் எண் :

544தணிகைப் புராணம்

 உதிக்கினல் லுணர்வு மேலே யுறுபிணி நாட வொட்டா
 மதித்தன ரொழுக லாறும் வழுவிக்கு மூப்பு நண்ணில்.

(இ - ள்.) மனிதற்கு அகவை ஆண்டு நூறு என்று கூறப்படினும், நூறாண்டுங் கடைபோக வாழ்தல் மிக அரியதாகும். ஊழான் உளவாகும் ஆண்டுகளினும், சிலயாண்டுகளைத் தோன்றாநின்ற இளமை பாழ்படுத்தும், சிலயாண்டுகளைக் காமநோய் பாழ்செய்யும். காளைப்பருவந் தீர்ந்து ஒரோவழி நல்லுணர்வு தோன்றியவிடத்தும் நோய்கள் அவ்வுணர்வினை நாடுதற்கு இடங்கொடா. நல்லொழுக்கினை மதித்து ஒழுகும் நெறியினையும் முதுமைப் பருவம் வந்தவிடத்தே கெடுத்தொழிவதாம்.

(வி - ம்.) நூறும் என்புழி - உம்மை முற்றும்மை. தின்னும் என்றது பயன்படாதபடி செய்யும் என்றவாறு. நல்லுணர்வு - மெய்யுணர்வு. மதித்தனர் -
முற்றெச்சம்.

(324)

 இத்திறத் தினர்கண் மாந்த ரேனைய வுயிர்க ளெல்லாம்
 தத்தமக் கனந்த கோடிப் பகைவிராய்த் தாக்கப் பட்டும்
 பொத்திய பசியிற் பட்டும் பொழுதிரு துடற்றப் பட்டும்
 மெத்திய துயரத் தாழ்ந்து விளிவன பல்லாற் றானும்.

(இ - ள்.) மக்களாய்ப் பிறந்தோர் இத்தன்மையர். இனி மற்றை அஃறிணை உயிர்கள் எல்லாம் தத்தமக்கு எண்ணிறந்த பகையுயிர்கள் உண்டாகி அவற்றால் தாக்கப்பட்டும் அறிவைமூடிய பசிப்பிணியிலே அகப்பட்டும் சிறுபொழுது பெரும்பொழுதுகளால் துன்புறுத்தப்பட்டும், மிகுந்த துயரத்திலே அழுந்திப் பலவழிகளானும் இறந்தொழியும்.

(வி - ம்.) அனந்தம் - முடிவற்ற. பகை - பகையாமுயிர். பொத்துதல் - மூடுதல். மெத்திய - மிகுத்த.

(325)

 இருவகைத் தாகு நோயொன் றடைவிடு மருந்தே யோமம்
 உரைமனு வன்ன மாதி யுதவலித் திறனா லொன்று
 பிரிவுறு முடலைக் கொண்டே பெருகிய சுற்ற மெல்லாம்
 கருவிழி முத்தங் கான்று கவலையுற் றரற்ற மாதோ.

(இ - ள்.) உயிர்கட்கு வரும் நோய்தானும் இருவகைப்படும் அவற்றுள் ஒருவகை நோய், மருந்தானும், ஓமஞ் செய்தலானும் மந்திரங்கணித்தலானும் சோறு முதலியன வறியோர்க்கு வழங்குதலானும் இன்னோரன்ன செயல்களாலே இடையிலே தீர்வனவாகும். மற்றொரு வகை நோயோ மிகுந்த கேளிரெல்லாம் கரிய கண்கலங்கி நீருகுத்துக் கவலைகொண்டு அழும்படி உடலையே தனதாக்கிக்கொண்டே கழிவதாம்.

(வி - ம்.) நோய் உடற்கு வாத முதலியவற்றால் வருவனவும், சாவும் என இருவகைப்படும். முன்னது மருந்து முதலியவற்றாற் தீரும் பின்னது இறப்போடு கழியும் என்றவாறு. சாவிற்கு மருந்தில்லை என்றவாறு.

(326)