| | மாதரை மைந்தர் தம்மை வளநிதித் திரளை விட்டுப் | | | போதுமே யென்றென் றேங்கிப் புழுங்கிநெஞ் சழிவ தல்லால் | | | சாதலை யுறுமஞ் ஞான்றுந் தருமமொன் றாற்றா ரெந்தை | | | பாததா மரையை முன்னார் வறியராய்ப் பதித ராவார். |
(இ - ள்.) உய்தியில்லாத அந்தச் சாக்காடுதான் நெருங்கி வந்துற்ற பொழுதும் "ஐயகோ! நம் மனையாளை மக்களை வளவிய பெருஞ் செல்வங்களை விட்டுப் போகின்றேமே" என்று என்று ஏங்கிப் புழுங்கிக் கையறவானே நெஞ்சம் அழிவதன்றி எஞ்சிய அச்சிறு பொழுதிலேனும் யாதேனும் ஓர் அறத்தினை ஆற்றுவேம் என்று எண்ணார். எம்பிரானுடைய திருவடித் தாமரையையும் சிந்தியார் அளியரோ! அளியர்!! அச் சாவினாலே அனைத்துமிழந்து வறியராதலேயன்றித் தீவினையாளரும் ஆகாநிற்பர். (வி - ம்.) போதும் - தன்மைப்பன்மை. ஒன்றும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தாற் றொக்கது. முன்னார் - நினையார். பதிதர் - தீவினையாளர். (327) | | தருக்குறுஞ் செல்வ மெய்தற் றருக்கினாற் பிழைக ளெல்லாம் | | | பெருக்குநல் கூரி னந்தோ பிறருழை யிரந்து சேறல் | | | மரித்தலிற் றுயர மீண்டும் வந்தவர்க் கிரக்க மற்றுக் | | | கரத்தன்மற் றதனி னூங்குக் கடுந்துய ரறிவி லார்க்கே. |
(இ - ள்.) அறிவிலான் ஒருவன் செருக்குறுதற்குக் காரணமான செல்வம் தன்னை வந்தெய்தியவிடத்தே செருக்குற்றுத் தீவினைகள் பல வற்றையும் செய்து பெருக்கி்க் கொள்வன். இனி வறுமை வந்தவிடத்தே ஐயகோ! பிறர்பால் இரந்துபோதல் அவனுக்குச் சாத்துன்பத்திலும் காட்டிற் பெருந்துயரமாகும். பின்னரும் தன்பாலிரந்து வந்தோர்க்கு இரக்கமின்மையால் காத்தலும் அதனினும் காட்டிய கடிய துன்பமாம். (வி - ம்.) தருக்கு - செருக்கு. நல்கூர்தல் - வறுமையுறுதல். மரித்தல் - சாதல். இச்செய்யுள் விற்பூட்டுப் பொருள்கோள். (328) | | மன்னிய செல்வ ராகி வாழினும் வளமிக் கீண்டித் | | | தன்னின்மேம் பட்டார்க் கண்டு தழைத்தவர் போறல் வேட்டுப் | | | பின்னரு மீட்டி யீட்டிப் பேதுற லன்றிப் பெற்ற | | | நன்னிதி கொண்டு நீதி நடத்துத லேவர் வல்லார். |
(இ - ள்.) மாந்தர் நிலைபெற்ற செல்வப் பேறுடையராகி வாழுமிடத்தும், செல்வம் மிகுதியாகத் திரண்டமையானே தம்மினும் சிறந்தோரைக் கண்டு, தாமும் செல்வத்தாலே பெருகி அவர்போன்று ஆதலை விரும்பி மேலும் பொருளைத் தேடித்தேடி வருந்துதலன்றி, தாம் பெற்றுள்ள நல்ல பொருள் போதுமென்று மன அமைதிகொண்டு அறஞ்செய்தற்கு யாவரே வல்லுநர் ஆவர். |