பக்கம் எண் :

546தணிகைப் புராணம்

(வி - ம்.) எனவே, ஆசை ஆராவியல்பிற்று அதனால் மேலும் மேலும் துன்பமே வளரும் என்றாராயிற்று. தன்னின் என்பது ஒருமை பன்மை மயக்கம். நீதி - அறம்.

(329)

 மனைக்குரி மனையா டன்னை வாய்த்தநன் மைந்தர் தம்மைக்
 கனைத்தலை சுருட்டும் வேலைக் கடனிகர் செல்வந் தன்னை
 எனைத்தையு மிலம்பா டென்றே யிம்மெனத் துறந்து பெம்மான்
 தனைச்சர ணடைந்து ளாரே தனைநிக ரில்லாச் செல்வர்.

(இ - ள்.) மனைவாழ்க்கைக்குரிய மனையாளையும், ஊழானே வாய்த்துள்ள அறிவறிந்த நன்மக்களையும், ஆரவாரித்து அலையெறியும் கரையையுடைய கடல்போன்ற பெரிய செல்வத்தையும், இன்னோரன்ன எல்லாவற்றையும் வறுமையையொத்த துன்பப்பொருள் என்றே மனதிலுணர்ந்து கொண்டு ஒருநொடிப் பொழுதிலே இவற்றையெல்லாம் துறந்துபோய் எம்பெருமான் திருவருளின்பால் தஞ்சம் புகுந்த சான்றோர்களே ஒப்பற்ற செல்வமுடையோராவர்.

(வி - ம்.) உரி - உரிய. இலம்பாடும் செல்வமும் பயனால் ஒத்தலின் செல்வநிலையும் இலம்பாட்டு நிலையே என்றுணர்ந்து கொண்டு என்றபடி. இம் : குறிப்புமொழி. இம்மென்னும் ஒருநொடிப் பொழுதில் என்பது.

(330)

 எந்தையை விழைந்த பத்த ரிருதிறத் தோர்க ளாவர்
 முந்துநூல் வழியான் மும்மைப் பொருளுணர்ந் திறைவன் பாங்கர்ச்
 சிந்தையை யொருக்கி நின்றோ ரொருவர்மற் றொருவர் தேரா
 தந்தில்வந் துதித்த வாறே யறிவுமிக் கன்பு செய்வோர்.

(இ - ள்.) எம்பெருமானாகிய இறைவன் திருவருளை விரும்புகின்ற மெய்யன்பர் இருவகைப்படுவர். அவருள் வேதாகம முதலிய முதன்மையுடைய நூல்களை ஓதி முப்பொருளியல்புணர்ந்து அவற்றுள் நிலையுதலில்லாத பற்றினை அறுத்து மெய்ப்பொருளாகிய இறைவன் திருவடியிலே நெஞ்சத்தை ஒருங்கே நிறுத்தி நின்றோர் ஒருவகையினராவார். இனி மற்றொரு வகையினர் பண்டை நற்றவத்தாலே இறையன்போடு பிறந்து நூனெறியானன்றி இயல்பாகவே அறிவுமிக்கு இறைவன்பாலன்பு செய்வோர் ஆவர்.

(வி - ம்.) இவருள் முன்னையோர் வைநயிகர் என்றும் பின்னையோர் சாமுசித்தர் என்றும் கூறப்படுவர்.

(331)

 பொருந்திய வேக தேச வுடலினைப் பொதியுந் தோறும்
 வருந்தியங் கறிவு மேக தேசமாய் வசித்துக் காணும்
 இருந்திட வேக தேச வுடலெழுந் தொன்றிக் காணில்
 திருந்திய வறிவு மெங்குஞ் செறிந்தபூ ரணத்தி னாமே.